

முன்னாள் பிரதமர் தேவகவுடா பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் தேவகவுடா. கர்நாடக அரசியலில் முக்கியப் பங்கு வகித்த கௌடா 1970-களில் ஜனதா கட்சியில் படிப்படியாக முன்னேறினார். 1980-ல் அக்கட்சி பிளவுபட்டபோது ஜனதா தளம் கட்சியை உருவாக்க பெரும் பங்காற்றினார்.
1996-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் முந்தைய ஆளும் கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் தோல்வியுற்று எதிர்க்கட்சியான பாஜக ஆட்சி அமைக்க முடியாதநிலை ஏற்பட்டது. அப்போது, புதியதாக உருவான ஐக்கிய முன்னணியின் சார்பில் இந்தியப் பிரதமராக தேவ கவுடா பொறுப்பேற்றார். 1996ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி பதவியேற்ற அவர், 1997ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி வரை பிரதமர் பதவியில் இருந்தார்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவராக உள்ள அவர் மாநிலங்களவை எம்.பி.யாகவும் உள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த தேவகவுடா பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடந்தது. இதுகுறித்த புகைப்படங்களை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவுடன் சிறந்த சந்திப்பு நடந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பாக தேவகவுடா கூறுகையில் ‘‘பிரதமர் மோடியுடனான சந்திப்பு சுமூகமாக இருந்தது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. வரவேற்பு கொடுத்த மோடிக்கு நன்றி தெரிவித்தேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.