மழலையர் முதல் 12-ம் வகுப்பு வரை கல்வியில் ஆயுஷ் பாடம்: மத்திய அரசு முடிவு

மழலையர் முதல் 12-ம் வகுப்பு வரை கல்வியில் ஆயுஷ் பாடம்: மத்திய அரசு முடிவு
Updated on
1 min read

ஆயுர்வேதம் மற்றும் யோகா அடிப்படையிலான பாடத்திட்டத்தை பள்ளி கல்வியில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனோவால் கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் கூறியதாவது:

மழலையர் வகுப்புகள் உள்பட 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வியில் இந்த பாடத்திட்டத்தை சேர்க்கும் வரைவு பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.

உயர்கல்வித்துறை அமைத்துள்ள தேசிய கல்விக் கொள்கை செயல்பாட்டுக் குழுவில் ஆயுஷ் அமைச்சகத்தின் நிபுணர்களும் உள்ளனர். கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி நடைபெற்ற செயல்பாட்டுக்குழுவின் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவது தொடர்பான ஆயுஷ் அமைச்சகத்தின் நடவடிக்கை அறிக்கை பகிர்ந்து கொள்ளப்பட்டது.

நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தில் உள்ள தேசிய ஆயுர்வேத நிறுவனம் இதற்கான பாடத்திட்டத்தை வகுத்துள்ளது.

16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் வகையில் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் பாலரக்ஷா கிட் என்பதை உருவாக்கியுள்ளது. இது ஆயுஷ் அமைச்சகத்தின் கடும் விதிமுறைகளின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுவான தொற்றுகளிலிருந்து குழந்தைகளை இது காக்கும். இந்த தொகுப்பில் மருத்துவ குணம் கொண்ட திரவ மருந்துகள் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும். மத்திய அரசின் இந்தியன் மெடிசின்ஸ் பார்மசுட்டிகள் கார்ப்பரேஷன் நிறுவனம் இதனைத் தயாரிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in