

கிரிப்டோகரன்சி அபாயகரமான முதலீடாக உள்ளது, முழுமையான ஒழுங்குமுறை கட்டமைப்பில் இல்லை, இதனை வரன்முறைப்படுத்த நாடாளுமன்றத்தில் விரைவில் மசோதா தாக்கல் செய்யப்படும் என என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி குறித்து ரிசர்வ் வங்கி மற்றும் சந்தை கட்டுப்பாட்டாளர் செபியும் கவலை தெரிவித்து வந்தன. கிரிப்டோ வர்த்தகத்தில் ஏற்கெனவே பலகட்ட எச்சரிக்கைகள் வழங்கப்பட்ட நிலையில், அரசு தீவிர வரம்புகளை நிர்ணயிக்க ஆலோசனை மேற்கொண்டது.
இதற்காக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் புதிய மசோதா கொண்டு வரப்படும் என தகவல்கள் வெளியாகின.
அதன்படி கிரிப்ட்டோகரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சி ஒழுங்குமுறை மசோதா 2021 என்ற பெயரில் இந்த மசோதா உருவாக்கப்படுகிறது. மத்திய அரசு இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பல தனியார் கிரிப்டோகரன்சிகளைத் தடை செய்யவும், இதே தொடர்ந்து இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக டிஜிட்டல் கரன்சி உருவாக்கும் திட்டமாகவும் இந்த மசோதா இருக்கும் என கூறப்படுகிறது.
இந்தநிலையில் கிரிப்டோகரன்சி குறித்து மாநிலங்களவையில் இன்று பல்வேறு கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.
இந்தியாவில் கிரிப்டோகரன்சியை ஒழுங்கு முறைப்படுத்த புதிய மசோதாவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளோம்.
கிரிப்டோகரன்சியின் ஆபத்துகளையும், அது தவறான கைகளுக்குச் செல்வது குறித்துக் கண்காணித்து வருகிறோம். புதிய மசோதாவை உருவாக்கி, நாடாளுமன்றத்தில் விரைவில் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்க உள்ளோம்
ஏற்கெனவே உருவாக்கப்பட்ட மசோதாவில் மாறுபட்ட கோணத்தில் மறு ஆய்வு செய்ய வேண்டிய நிலை இருக்கும் காரணத்தால் தற்போது புதிய மசோதாவை உருவாக்க முடிவு செய்துள்ளோம்
கிரிப்டோகரன்சி சார்ந்த விளம்பரங்கள் தடை செய்யப்படுமா என சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார். கிரிப்டோ விளம்பரங்களுக்கான வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் உள்ளது, தடை செய்யும் முன் விதிமுறைகளைச் சரிபார்த்து முடிவு எடுக்கப்படும்.
என்எப்டிக்கு தனி ப்ரேம்வொர்க் இருக்குமா என்பதைச் சொல்ல முடியாது, ஆனால் இதுகுறித்து ஆலோசனை செய்துள்ளோம்.
கிரிப்டோகரன்சி முதலீட்டின் மீது எத்தனை பேர் வருமான வரி செலுத்துகிறார்கள் என்ற கேள்வியை உறுப்பினர்கள் கேட்டுள்ளனர்.
இதற்கான தரவுகள் இல்லை. முதலீட்டாளர்கள் கிரிப்டோ முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.