

மத்திய அரசு சாதிய மனப்பான்மையோடு தான் சாதிவாரிக் கணக்கெடுப்புக் கோரிக்கையை புறக்கணித்து வருகிறது என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
லக்னோவில் இன்று பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் மாநிலத்தின் இடஒதுக்கீடு இடங்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாயாவதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சி சார்பிலான முஸ்லிம்கள், ஜாட் மற்றும் ஓபிசி சமூக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பிறகு மாயாவதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு முஸ்லிம்களை மாற்றாந்தாய் போல் நடத்துகிறது, ஒரு மாநில அரசின் இத்தகைய செயல் அவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது.
உ.பியில் மத சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மாநில அரசுடன் அனைத்து விஷயங்களிலும் மிகவும் வருத்தப்படுகிறார்கள். இந்த அரசாங்கத்தில் அவர்களின் முன்னேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் முஸ்லிம்கள் யோகி அரசால், போலி வழக்குகளில் சிக்க வைக்கப்படுகிறார்கள். புதிய விதிகள் மற்றும் சட்டங்களால் அவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் தொடர்ந்து சுரண்டப்படுகிறார்கள்.
இப்படிப்பட்ட துஷ்பிரயோகங்கள், பாஜகவின் மாற்றாந்தாய் மனப்பான்மையை காட்டுகிறது. எனது அரசாங்கத்தில், அவர்களின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.
இடஒதுக்கீட்டை பயனற்றதாக்கிய புதிய விதிகள்
ஓபிசி சமூகத்தின் சாதிவாரியான கணக்கெடுப்பு கோரிக்கையை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்கிறது. சாதிய மனப்பான்மையோடு தான், மத்திய அரசு இக் கோரிக்கையை புறக்கணித்துவருகிறது.
மண்டல் கமிஷன் அறிக்கையை காங்கிரஸ் அமல்படுத்தவில்லை, விபி சிங் அரசில் அமல்படுத்தியதால்தான் பகுஜன் சமாஜ் கட்சி ஓபிசி சமூகத்திற்கு இடஒதுக்கீட்டைப் பெற்றுத்தர முடிந்தது.
மேலும், மத்திய, மாநில அரசுகளின் சாதிய மனப்பான்மைதான், புதிய விதிகள் மற்றும் சட்டங்களை உருவாக்கி இட ஒதுக்கீட்டை பயனற்றதாக ஆக்கியதோடு நீதிமன்றங்களின் ஆதரவையும் பெற்றுள்ளன. உத்தரப் பிரதேசத்திலும் இதுதான் நடக்கிறது.
பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால், முஸ்லீம்கள் தவிர ஜாட் மற்றும் ஓபிசி சமூகங்களின் முன்னேற்றம், நலன் மற்றும் பாதுகாப்பை தனது அரசாங்கம் உறுதி செய்யும்.
இவ்வாறு மாயாவதி தெரிவித்தார்.