

12 எம்.பி.க்கள் இடைநீக்க விவகாரத்தில் மன்னிப்பு கேட்க இவர்கள் மன்னர்கள் அல்ல, இவர்கள் பின்பற்றுவது பெரும்பான்மை பாகுபலி தந்திரம், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் முயற்சி என மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி சாடியுள்ளார்.
மாநிலங்களவை இன்று காலை கூடியதும், 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் பிரச்சினை எழுப்பினர். விதி 256ன் கீழ், 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் வீதி மீறப்பட்டுள்ளதாக மல்லிகார்ஜுன் கார்கே கூறினார்.
ஆனால் 12 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யும் முடிவை திரும்பப் பெற வாய்ப்பில்லை என அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திட்டவட்டமாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாநிலங்களவை மட்டுமின்றி மக்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி கூறியதாவது:
நாடாளுமன்ற கடந்த கூட்டத் தொடரில் நடந்த நடவடிக்கைகளின் தவறுகளுக்கு தற்போதைய அமர்வில் தண்டனை வழங்கப்படுவதை எங்காவது கேட்டிருக்கிறோமா? பார்த்தோமா? இங்கே ஒரு பின்னோக்கி சென்று தண்டனை வழங்குகிறார்கள்.
எதிர்க்கட்சி எம்.பி.க்களை அச்சுறுத்தவும், மிரட்டவும் செய்யப்படும் நடவடிக்கையாக உள்ளது. அச்சத்தை ஏற்படுத்துவதன் மூலம் எங்கள் தரப்பு கருத்துக்களை முன்வைப்பதற்கான வாய்ப்புகளைப் பறிப்பதும் இந்த அரசின் புதிய உத்தியாகும். இதற்கு முன்பு நாடாளுமன்றத்தில் இதுபோன்ற பின்னோக்கிய நடவடிக்கையை நாங்கள் பார்த்ததில்லை.
நாடாளுமன்றத்தில் அரசர்களின் ஆட்சி இல்லை. இது ஜனநாயகம். நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் மகா பஞ்சாயத்து. அவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதற்கு அவர்கள் மன்னர்களோ அல்லது ஜமீன்தார்களோ அல்ல. இது ஒரு பெரும்பான்மையினரின் 'பாகுபலி' தந்திரம். ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் முயற்சி.
இவ்வாறு அவர் கூறினார்.