மிஸ்டர் பிஎம் தயவுசெய்து சர்வதேச விமானங்களை நிறுத்துங்கள்:கேஜ்ரிவால் வேண்டுகோள்

மிஸ்டர் பிஎம் தயவுசெய்து சர்வதேச விமானங்களை நிறுத்துங்கள்:கேஜ்ரிவால் வேண்டுகோள்
Updated on
1 min read

13 நாடுகளில் ஒமைக்ரான் பரவிய நிலையில் சர்வதேச விமானங்களை நிறுத்துங்கள் என்று பிரதமருக்கு அர்விந்த் கேஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திங்களன்று உலக சுகாதார அமைப்பு ஒமைக்ரான் குறித்து ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தது. புதிய உருமாற்ற வைரஸான ஒமைக்ரான் மிகத் தீவிரமான அளவில் உலகளாவிய ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் அது அலையாக பரவும்போது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறியிருந்தது.

ஒமைக்ரான் பற்றிய கவலைகள் அதிகரித்துவரும் நிலையில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

''ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து விமானங்களை பல நாடுகள் கட்டுப்படுத்தியுள்ளன. நாம் ஏன் தாமதிக்கிறோம்? புதிய உருமாற்ற வைரஸின் பரவலைச் சரிபார்க்க இஸ்ரேலும் ஜப்பானும் விரிவான பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. முதல் அலையிலும், நாம் விமானங்களுக்கான தடையைத் தாமதப்படுத்தினோம். பெரும்பாலான சர்வதேச விமானங்கள் டெல்லியில் தரையிறங்குகின்றன. மேலும் நகரம் மிகவும் பாதிக்கப்படும். பிரதமர் மோடி தயவுசெய்து விமானங்களை நிறுத்துங்கள்,"

இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து சண்டிகர் திரும்பிய 39 வயது நபருக்கு கோவிட்19 நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. அவருடன் தொடர்பு கொண்ட இரண்டு பேருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பப்படும் என்றும் வெளியிடப்பட்டுள்ள ஏஎன்ஐ ட்விட்டர் தகவலை கேஜ்ரிவால் தனது ட்வீட்டோடு பகிர்ந்துள்ளார்.

உத்தவ் தாக்கரே கடிதம்

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கடந்த வாரத்தின் இறுதியில் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், ''பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். எந்த தாமதமும் மிகவும் தீங்கு விளைவிக்கும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்திய அரசு, பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நுழைவு விதிகளில், ''இந்தியாவிற்கு வரும் ஒவ்வொரு சர்வதேச பயணிகளும் சுய அறிவிப்பு படிவத்தை பூர்த்தி செய்து எதிர்மறையான ஆர்டி-பிசிஆர் சோதனை அறிக்கையை காட்ட வேண்டும்'' என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in