வந்தே பாரத் விமான சேவை: தமிழகத்தைச் சேர்ந்த 15,76,213 பேர் பயணம் 

வந்தே பாரத் விமான சேவை: தமிழகத்தைச் சேர்ந்த 15,76,213 பேர் பயணம் 
Updated on
1 min read

வந்தே பாரத் இயக்கத்தின் கிழ் 2,17,000-க்கும் அதிகமான விமான சேவைகள் இயக்கப்பட்டன, தமிழகத்தை சேர்ந்த 15,76,213 பேர் பயணம் செய்துள்ளனர் என விமான போக்குவரத்து இணை அமைச்சர் ஜெனரல் வி கே சிங் கூறினார்.

மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர் கூறியதாவது:

உலகளாவிய கோவிட்-19 பெருந்தொற்றின் போது, வெளிநாடுகளில் இருந்த இந்தியர்களை திரும்ப அழைத்து வருவதற்கும், இந்தியாவில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பயண வசதிகளை வழங்குவதற்கும் வந்தே பாரத் இயக்கத்தை இந்திய அரசு மேற்கொண்டது.

அக்டோபர் 31, 2021 நிலவரப்படி, வந்தே பாரத் இயக்கத்தின் கீழ் 2,17,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன மற்றும் 1.83 கோடி பயணிகள் பயனடைந்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை 15,76,213 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்களில் 6,70,368 பேர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். 9,05,845 பேர் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.

உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கிழ் ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் இந்திய நிறுவனங்களுக்கு ரூ 120 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

ட்ரோன்களின் பயன்பாட்டிற்கு டிஜிசிஏ வழங்கும் சான்றிதழ் அவசியமாகும். எந்த ஆளில்லா விமானத்தையும் இயக்குவதற்கு டிஜிசிஏ வழங்கும் ரிமோட் பைலட் உரிமம் கட்டாயமாகும். இத்துறையின் நலனுக்காக ட்ரோன் விதிகள், 2021 இயற்றப்பட்டுள்ளன.

2020-21 மற்றும் 2021-22 ஆகிய ஆண்டுகளில் பதினெட்டு விமான நிலையங்கள் /ஹெலிபேடுகள் /நீர் விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலுள்ள நெய்வேலி இதில் ஒன்றாகும்.

மேலும் 123 உடான் வழித்தடங்கள் 2020-21-ம் வருடத்தில் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. கர்னூலில் இருந்து சென்னை, சென்னையில் இருந்து கர்னூலும் இவற்றில் அடங்கும்.

உள்நாட்டு விமான சேவைகளின் எண்ணிக்கை கோவிட்டுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்தவாறு தற்போது இயக்கப்படுகின்றன. பராமரிப்பு, செப்பனிடுதல் உள்ளிட்ட எம் ஆர் ஓ சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், விமான போக்குவரத்து துறையில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக கிரீன்ஃபீல்டு மற்றும் ஏற்கனவே இருக்கும் விமான நிலையங்களில் 100 சதவீத நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுகிறது.

அடுத்த ஐந்து வருடங்களில் ரூ 25,000 கோடி மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை இந்திய விமான நிலையங்களின் ஆணையம் மேற்கொள்ளவுள்ளது.

அரசு தனியார் கூட்டு முறையின் கீழ் நாடு முழுவதும் புதிய கிரீன்ஃபீல்டு விமான நிலையங்களை உருவாக்குவதற்காக சுமார் ரூ 36,000 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. உடான் திட்டத்தின் கீழ், சேவைகள் குறைவாக உள்ள அல்ல சேவைகளே இல்லாத 62 விமான நிலையங்களை இணைக்கும் வகையில் 393 வழித்தடங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in