

நீரிழிவு நோயாளிகளுக்கு அரசின் ஆதரவும் மானியமும் தேவை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தி உள்ளார்.
நீரிழிவு நோய் குறித்த அஹுஜா-பஜாஜ் கருத்தரங்கு டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது:
கரோனா தொற்றுக்கு விஞ்ஞானிகள் சில மாதங்களிலேயே தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டனர். ஆனால் நீரிழிவு நோய்க்கு பல ஆண்டுகளாகியும் நிரந்தர தீர்வு காணப்படவில்லை. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் சர்க்கரை அளவு, உணவு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டி உள்ளது. மேலும்ஏராளமான பணத்தையும் செலவிடவேண்டி உள்ளது.
எனவே, நீரிழிவு நோயாளிகளின் சிகிச்சைக்காக அரசு ஆதரவு அளிப்பதுடன் மானியம் வழங்க வேண்டியது அவசியம். மேலும் இந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக அதிகப்படியான மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அத்துடன் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக நவீன மருந்து கண்டுபிடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட வேண்டும்.
நானும் கடந்த 30 ஆண்டுகளாக இந்த நோயால் பாதிக்கப்பட்டு மருந்து எடுத்துக்கொண்டு வருகிறேன். உடல் பருமன், உடல் உழைப்பின்மை மட்டுமல்லாது, மன அழுத்தமும் நீரிழிவு நோய்க்கு காரணமாக உள்ளது. மன அழுத்தம் கொண்ட இந்த தொழிலை விடுத்து வேறு தொழிலில் ஈடுபட்டிருந்தால் இந்த நோயிலிருந்து நான் தப்பித்திருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பிடிஐ