

பல்வேறு மாநிலங்கள், யூனியன்பிரதேசங்களில் தேசிய குடும்பநல ஆய்வு-5 (என்எஃப்எச்எஸ்) நடத்தப்பட்டது. சிறார், பெரியவர்களிடையே உடல் பருமன் பிரச்சினை அதிகரித்துள்ளதாக அந்தஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த முறை நடைபெற்ற என்எஃப்எச்எஸ்-4 ஆய்வில் 2.1% சிறுவர்கள் உடல் பருமனாக இருந்தனர். தற்போது நடைபெற்ற ஆய்வில் அது 3.4% ஆக அதிகரித்துள்ளது. சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களிடத்திலும் இந்த உடல் பருமன் பிரச்சினை உள்ளது. கடந்த ஆய்வில் 20.6%ஆக இருந்த உடல் பருமனான பெண்களின் எண்ணிக்கை தற்போது 24% ஆக உயர்ந்துள்ளது. இதுபோல ஆண்களின் எண்ணிக்கை 18.9 சதவீதத்தில் இருந்து 22.9% ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா, குஜராத், மிசோரம், திரிபுரா, லட்சத்தீவுகள், ஜம்மு-காஷ்மீர், உத்தரபிரதேசம், டெல்லி, மேற்கு வங்கம், ஆந்திரா, லடாக் ஆகிய மாநிங்கள், யூனியன் பிரதேசங்களில் 5 வயதுக்குக் குறைவான சிறுவர்களில் உடல்பருமன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கோவா, தமிழ்நாடு, தாத்ரா அன்ட் நாகர் ஹவேலி, டாமன் அன்ட் டையூ ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மட்டுமே 5 வயதுக்குள்பட்ட உடல் பருமன் பிரச்சினையுள்ள குழந்தைகள் குறைவாக உள்ளனர்.
30 மாநிலங்களில் பெண்களுக்கும், 33 மாநிலங்களில் ஆண்களுக்கும் உடல் பருமன் பிரச்சினை உள்ளது. மேலும் அங்கு உடல் பருமன்பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. சுகாதாரமற்ற உணவைத் தேர்ந்தெடுத்தல், போதுமானஉடல் உழைப்பு இல்லாததால் இந்த பிரச்சினை ஏற்படுவதாக இந்திய மக்கள் தொகை பவுண்டேஷன் செயல் இயக்குநர் பூனம் முட்ரேஜா தெரிவித்துள்ளார்.