

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும், நாட்டில் உள்ள அனைத்து விவிஐபி மற்றும் விஐபிபக்தர்களுக்கும் மிகவும் பழக்கமானவர் ‘டாலர்’ சேஷாத்ரி (73).திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த 43 ஆண்டுகளாக பணியாற்றி வந்த இவர், நேற்று அதிகாலை விசாகப்பட்டினத்தில் மாரடைப்பால் காலமானார்.
இவரது மறைவுக்கு துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு, உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், அமைச்சர்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகாவில் உள்ள சு. நாவல்பாக்கம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் ’டாலர்’ சேஷாத்ரி. பெயருக்கு தகுந்தாற் போல் கழுத்தில் மிகப்பெரிய தங்க டாலர் இருக்கும். இவர் கடந்த 1978-ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் மிகவும் சாதாரண குமாஸ்தாவாகத்தான் பணியில் சேர்ந்தார். இவரது பணித்திறன், சுவாமி சேவையில் இவர் காட்டும் அர்ப்பணிப்பு போன்றவற்றால் கடந்த 2007-ம் சிறப்பு அதிகாரியானார். ஆனால், ஓய்வு பெற்ற மறுநாள் முதல் அவரது பணியை தேவஸ்தானம் பதவி நீட்டித்து வந்தது.
தேவஸ்தானம் சார்பில் நேற்று முன்தினம் கார்த்திகை சோமவார பூஜைகளை நடத்த டாலர் சேஷாத்ரி விசாகப்பட்டினம் சென்றார். பின்னர், இரவு அதே மண்டபத்தில் உறங்க சென்றார். நேற்று அதிகாலை 4 மணி அளவில் டாலர் சேஷாத்ரிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சக ஊழியர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே இவரது உயிர் பிரிந்தது. பின்னர், டாலர் சேஷாத்ரியின் உடல் அதே ஆம்புலன்ஸில் திருப்பதிக்கு புறப்பட்டது. இன்று, அவரது உடல் திருப்பதியில் தகனம் செய்யப்படுகிறது.