

ரோஹித் வெமுலா, ஜே.என்.யூ.வின் கண்ணய்யா குமார் போலவே அடுத்ததாக அலகாபாத் பல்கலைக் கழக மாணவர் தலைவரான ரிச்சா சிங் என்ற பெண்ணுக்கு பல்கலைக் கழக நிர்வாகம் நெருக்கடி கொடுத்து வருகிற விவகாரம் எழுந்துள்ளது.
128 ஆண்டு கால அலகாபாத் பல்கலைக் கழக வரலாற்றில் மாணவர் தலைவராக பெண் ஒருவர் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிச்சா சிங்கிற்கு பல்கலை. நிர்வாகம் நெருக்கடி கொடுத்து வருவது குறித்து ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் கே.சி.தியாகி கூறும்போது, “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மற்றுமொரு ‘காவிமயமாக்க’முயற்சியாகும். நாங்கள் இதனை கடுமையாக கண்டிக்கிறோம், மற்ற கட்சிகளுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பவிருக்கிறோம்.
ரிச்சா சிங் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றுள்ளார். குறிப்பிடத்தகுந்த வகையில் வெற்றி பெற்ற மற்ற 4 பேரும் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தைச் சேர்ந்தவர்கள்.
ரோஹித் வெமுலா, கண்ணய்யா குமார், ஆகியோருக்கு அடுத்தபடியாக தற்போது ரிச்சா சிங்கை குறிவைக்கின்றனர். ஆனால் நாங்கள் இதனை அனுமதிக்கப் போவதில்லை. அதாவது ரிச்சா சிங் தானே தலைமைப் பதவியை விட்டு விலகிவிடுமாறு துன்புறுத்தப் படுகிறார். அவர் விலகிவிட்டால் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் அந்த இடத்துக்கு வரமுடியும்.
பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் வளர்ச்சி குறித்து பேசும் பிரதமர் மோடி மறுபுறம் ரிச்சா சிங் பல்கலை. வளாகத்தில் அனுபவிக்கும் அவமானங்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கொள்கையும் செயலும் முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளது”
என்றார் தியாகி.