

குஜராத் என்கவுன்ட்டரில் கொல்லப் பட்ட இஷ்ரத் ஜஹானை பற்றி தேசிய புலனாய்வு முகமையிடம் தெரிவித்திருந்த வாக்குமூலத்தின் ஒரு பகுதியை மும்பை தாக்குதல் குற்றவாளி டேவிட் ஹெட்லி திடீரென மறுத்துள்ளார்.
மும்பை தாக்குதல் வழக்கில் அப்ரூவராக மாறியுள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி அமெரிக்க சிறையில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் மும்பை தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்து வருகிறார். சிவசேனா தலைவர் பால்தாக்கரேவை கொல்ல முயன் றது, பாகிஸ்தான் பிரதமர் யூஸப் ராஸா கிலானி தனது வீட்டுக்கு வந்தது, மும்பை தாக்குதலில் ஈடுபட்ட 9 தீவிரவாதிகளுக்கும் வீரதீர செயல்களுக்காக பாகிஸ்தானில் வழங்கப்படும் நிஷான் இ ஹைதர் விருது வழங்க தஹாவ்வூர் ஹுசேன் ரானாவிடம் வலியுறுத்தியது உள்பட பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கடந்த சில நாட்களாக நடந்த குறுக்கு விசாரணையின் போது ஹெட்லி வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் மும்பை தாக்கு தலுக்கு மூளையாக செயல்பட்ட மற்றொரு தீவிரவாதி ஜுண்டால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அப்துல் வகாப் கான் நேற்று 4-வது நாளாக ஹெட்லியிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது ஹெட்லி கூறியதாவது:
கடந்த 2010-ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை அமெரிக்கா வந்து என்னிடம் வாக்குமூலம் பெற்றது. அப்போது 2004-ல் குஜராத்தில் என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான், இந்தியாவை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி என்பதை தெரிவித்தேன். ஆனால், அதனை தேசிய புலனாய்வு அதிகாரிகள் பதிவு செய்யவில்லை. மேலும் இஷ்ரத் ஜஹான் குறித்து தனிப்பட்ட முறையில் எனக்கு வேறு எந்த தகவலும் தெரியாது. லஷ்கர் இ தொய்பா தலைவர் ஜக்கி உர் ரெஹ்மான் லக்வி அளித்த தகவலின்படி தான் இஷ்ரத் ஜஹான் பற்றி எனக்கு தெரியவந்தது என்று தேசிய புலனாய்வு முகமையிடம் நான் கூறவில்லை. ஊடகங்கள் மூலமாகவே இஷ்ரத் ஜஹான் பற்றி அறிந்து கொண்டேன். மற்றபடி அவரைப் பற்றிய பூர்வாங்க தகவல்கள் ஏதும் எனக்கு தெரியாது.
லஷ்கர் இ தொய்பா சார்பில் பெண்கள் பிரிவு தொடங்கப்பட்டு அதற்கு அபு அய்மன் என்பவரது தாயார் தலைமை பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.
முஸாம்மில் பட் என்பவரை லக்வி என்னிடம் அறிமுகம் செய்து வைத்தார். லஷ்கர் இ தொய்பா வின் உயர் தலைவர்களில் ஒருவரான இவர் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் தாக்குதல் நடத்த பல்வேறு சதித் திட்டங்களை தீ்ட்டியவர். அக் ஷர்தாம் கோயில் மீதான தாக்குதல் உள்பட பல்வேறு சதித் திட்டங்களை நிறை வேற்ற முயற்சித்தார். ஆனால் இவரது அனைத்து திட்டங்களுமே தோல்வியில் தான் முடிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
இஷ்ரத் ஜஹான் குறித்து தெரிவித்த தகவல்களை தேசிய புலனாய்வு முகமை ஏன் பதிவு செய்யவில்லை என்ற கேள்விக்கு, ஹெட்லி பதில் அளிக்க மறுத்து விட்டார். மேலும் இஷ்ரத் ஜஹான் குறித்து ஏற்கெனவே புலனாய்வு துறையிடம் தெரிவித்த வாக்குமூலத்தின் ஒரு சில பகுதிகளையும் ஹெட்லி நேற்றைய விசாரணையின் போது மறுத்தார்.
அதே போல் முஸாம்மில் பட் குறித்த தகவல்களை தேசிய புலனாய்வு அதிகாரிகள் ஏன் பதிவு செய்யவில்லை என கேள்வி கேட்டதற்கு, தான் அவரை பற்றி விளக்கவில்லை என முன்னுக்கு பின் முரணான பதிலை அளித்தார்.