

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் நகரில் நடந்த தீவிரவாத தாக்கு தலில் காயமடைந்த தங்கள் நிறுவன பெண் ஊழியர் நிதி சபேகரின் உடல்நிலை சீராக இருப்பதாக ஜெட் ஏர்வேஸ் நேற்று தெரிவித்தது.
முன்னதாக நிதி சபேகர் கோமா நிலையில் இருப்பதாக தகவல் வெளியானது. இதை மறுக்கும் வகையில் ஜெட் ஏர்வேஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிதி சபேகரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் கோமா நிலையில் இல்லை என்றும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் தெரிவித்துள்ளார்” என கூறப்பட்டுள்ளது.
பிரஸல்ஸ் விமான நிலைய தாக்குதலில் ஜெட் ஏர்வேஸ் நிறுவன பெண் ஊழியர் நிதி சபேகர் காயமடைந்தார். இதில் 40 வயதான சபேகர், ரத்தம் சொட்டிய நிலையில் கிழிந்த ஆடையுடன் தோன்றும் படம் வெளியானது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, இந்தத் தாக்குதலின் சின்னமாக உருவெடுத்தது.
இவர் இப்போது பிரஸல்ஸ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சபேகரின் கணவர் மும்பையிலிருந்து பாரிஸுக்கு விமானம் மூலம் சென்றார். அங்கிருந்து தரை வழியாக பிரஸல்ஸ் நகருக்கு சென்று சபேகருடன் இருந்து அவரை கவனித்து வருகிறார்.