

தென்னாப்பிரிக்காவிலிருந்து மகாராஷ்டிரா திரும்பியவருக்கு கரோனா பாஸிட்டிவ் இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
புதிய உருமாற்ற வைரஸ் அவருக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதா என இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து மகாராஷ்டிரா திரும்பியவருக்கு கரோனா இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தானே மாவட்டத்தில் கல்யாண்-டோம்பிவலி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மருத்துவ அதிகாரி டாக்டர் பிரதீபா பென்பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நவம்பர் 24 அன்று கேப்டவுனில் இருந்து டோம்பிவலிக்கு பயணம் செய்துள்ள நபரிடம் அன்றே பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு கரோனா இருப்பது தற்போது உறுதியானது. உலக சுகாதார மையத்தால் கவலைக்குரிய ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள ஒமைக்ரான் உருமாற்ற வைரஸ் தொற்று அவருக்கு ஏற்பட்டுள்ளதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு, அந்த நபர் யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை. நோயாளி தற்போது கல்யாண் நகரின் ஆர்ட் கேலரி தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்யாண்-டோம்பிவலி சுகாதாரத் துறை விழிப்புடன் உள்ளது. புதிய உருமாற்றத்தைச் சமாளிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்."
இவ்வாறு தெரிவித்தார்.