Published : 29 Nov 2021 04:10 PM
Last Updated : 29 Nov 2021 04:10 PM
மகாராஷ்டிராவில் கிராமம் ஒன்றில் உள்ள முதியோர் இல்லத்தில் 67 பேருக்கு ஒரேநேரத்தில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அக்கிராமம் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஓர் எச்சரிக்கை மணியை அடிக்கத் தொடங்கிய புதிய உருமாற்ற வைரஸ் ஒமைக்கரான் பற்றிய கவலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் மகாராஷ்டிரா கிராமம் ஒன்றில் அதிகமாக கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தானே மருத்துவமனையின் சிவில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கைலாஷ் பவார் கூறுகையில், ''பாதிக்கப்பட்டவர்களில் 15 நோயாளிகளின் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன'' என்று தெரிவித்துள்ளார்.
தானே மாவட்டத்தில் சமீபத்திய மாதங்களில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய எண்ணிக்கையிலான பாதிப்புகளில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தைச் சேர்ந்த பிவாண்டி அருகே உள்ள கிராமம் சோர்கான். இக்கிராமத்தில் இயங்கிவரும் மாதோஸ்ரீ முதியோர் இல்லத்தில் 109 பேர் தங்கியுள்ளனர். அவர்களில் பலருக்கும் வைரஸின் அறிகுறிகள் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து சனிக்கிழமை அரசு மருத்துவர்கள் குழு அங்கு சென்று 109 பேரையும் பரிசோதித்தததாக மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் மணீஷ் ரெங்கே தெரிவித்தார்.
இவர்களில் 67 பேருக்கு ஒரே நேரத்தில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்ததில் செய்யப்பட்டு கரோனா வைரஸ் பாஸிட்டிவ் என முடிவுகள் பெற்ற அவர்களில் 62 பேர் ஏற்கெனவே முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் ஆவர். நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ள அனைவரும் தானே மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 67 பேரில் 62 பேர் (அனைவரும் மூத்த குடிமக்கள்) தவிர மற்ற ஐந்து பேர் முதியோர் இல்ல ஊழியர்கள்.
கரோனா பாஸிட்டிவ் முடிவுகள் வந்துள்ள அனைத்து நோயாளிகளில், 41 பேர் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 30 பேர் அறிகுறியற்றவர்கள்.
1,130 மக்கள்தொகை கொண்ட சோர்கான் கிராமம் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிராமத்தைச் சேர்ந்த ஊள்ளூர் மக்கள் அனைவரும் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு தானே மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!