Published : 29 Nov 2021 03:45 PM
Last Updated : 29 Nov 2021 03:45 PM

ஒமைக்ரான் அச்சம்; வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கிடுக்கிப்பிடி: மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு

கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து, வெளிநாடுகளில் இருந்து வருவோர் கடைப்பிடிக்க வேண்டிய புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்ட புதிய கட்டுப்பாடுகள் விவரம்:

''வெளிநாடுகளில் இருந்து வருவோர் கடந்த 14 நாட்களுக்கான பயண விவரம், நெகட்டிவ் பிசிஆர் பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை மத்திய அரசின் ஏர் சுவிதா போர்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்தப் புதிய விதிமுறைகள் அனைத்தும் வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
எச்சரிக்கைப் பட்டியலில் இருக்கும் பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூஸிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் விமான நிலையத்தில் வந்தபின் பிசிஆர் பரிசோதனை எடுக்க வேண்டும். அந்தப் பரிசோதனையின் முடிவுகள் வரும்வரை விமான நிலையத்தை விட்டு வெளியேறக் கூடாது.

பரிசோதனையில் கரோனா இல்லை எனத் தெரியவந்தால், வீட்டுக்குச் சென்று 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு 8-வது நாளில் மீண்டும் ஒரு பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும்.
ஒருவேளை பயணிகளுக்கு கரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், உடனடியாக தனிமைப்படுத்தப்படுவார்கள். அரசின் மருத்துவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். ஒருவேளை பரிசோதனையில் கரோனா தொற்று இருந்தால், அவருடன் வந்தவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

எச்சரிக்கைப் பட்டியலில் இருக்கும் நாடுகளில் இருந்துவரும் பயணிகள் விமான நிலையத்திலிருந்து சென்றபின் அடுத்த 14 நாட்களுக்குத் தங்கள் உடல்நிலையைக் கவனிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பயணிகளிடம் ரேண்டமாகப் பரிசோதனையும் நடத்தப்படும்.

இந்த விதிமுறைகளில் இருந்து 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் விலக்கு அளிக்கப்படுவார்கள். ஒருவேளை வீட்டில் தனிமைப்படுத்தி இருக்கும்போது கரோனா அறிகுறிகள் இருந்தால், உடனடியாக பிசிஆர் பரிசோதனை செய்து, உரிய கரோனா சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

பயணி ஒருவருக்கு கரோனா தொற்று இருந்தால், அவருடன் அமர்ந்திருந்த சக பயணி, அந்த வரிசையில் அமர்ந்திருந்தோர் முன்வரிசையில் அமர்ந்தோர், பின்னால் வரிசையில் இருந்த 3 வரிசை அனைவரும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள். இவர்கள் வீட்டுக்குச் சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x