

செம்மொழிகளாக அறிவிக்கப் பட்டுள்ள தமிழ், கன்னடம், மலையாளம், ஒரியா ஆகிய வற்றுக்கு மத்தியப் பல்கலைக் கழகங்களில் ஆய்வு இருக்கை அமைக்க பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி) முடிவு செய்துள்ளது.
இதற்கான ஆலோசனை கூட்டத்தை யூஜிசியின் உயர்நிலை கல்வி கட்டுப்பாட்டு அமைப்பு சமீபத்தில் நடத்தியது. அதில் ஆண்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் செலவில் ஒவ்வொரு இருக்கையும் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் அமைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இருக்கையில் பொறுப்பில் அமர்த்தப்பட உள்ள பேராசிரியர் தங்கள் மொழி மீதான செம்மொழி மற்றும் செவ்விலக்கிய ஆய்வுகளை நடத்துவார்.
தமிழுக்கான இந்த இருக்கை தமிழகத்தின் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட உள்ளது. இருக் கைக்கான நிதியை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு யூஜிசி வழங்கும். இதன் பிறகு அந்தந்த பல்கலைக் கழகம் நிதி ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டியிருக்கும்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் தமிழ் மொழி அறிஞரும், செம் மொழி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் பொறுப்பு அலுவலரு மான பேராசிரியர் க.ராமசாமி கூறும் போது, “செம்மொழிகளுக்கான பரிந்துரையின்போது அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் ஓர் ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டாலும் அமலுக்கு வர சுமார் 11 ஆண்டுகள் ஆகியுள்ளது.
இந்தப் பிரச்சினையில் நாம் மத்திய அரசை குறை கூற முடியாது. ஏனெனில், அவர்கள் செம்மொழி என்பதை இன்னும் கூட சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இதை அவர்களிடம் எடுத்துக் கூறி அதற்கான பலன்களை பெறுவது, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் மொழி அறிஞர்களின் பொறுப்பு ஆகும்” என்றார்.
தெலுங்கு மொழிக்காக ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் கடந்த 2011-ல் ஆய்வு இருக்கை அமைக்கப்பட்டு செயல் பட்டு வருகிறது. இங்கு நடந்து வரும் ஆய்வுகள் மீது கடந்த 5 ஆண்டுகளாக பல நூல்களும் வெளியாகியுள்ளன. சமஸ்கிருதம் மொழிக்காக நாடு முழுவதிலும் பல மாநிலங்களில் ஆய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
சென்னையில் அமைக்கப்பட்ட செம்மொழி தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைந்து எம்ஏ பட்டமேற்படிப்பு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தஞ்சை தமிழ் பல்கலை.யில் தொல் காப்பியம் பெயரிலும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத் தில் திருக்குறள் பெயரிலும் இருக் கைகள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால் செம்மொழி ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்பட்டு 7 ஆண்டு கள் ஆன பின்பும் அதன் முக்கியப் பொறுப்புகள் உட்பட பல பதவி களுக்கு இன்னும் பணியாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர்.
குறிப்பிட்ட தகுதிகள் பெற்றுள்ள மொழிகள் செம்மொழிப் பட்டியலில் சேர்க்கப்படும் என கடந்த 2004-ல் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகம் அறிவித்தது. இதன்படி 2004-ல் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. பிறகு 2005-ல் சமஸ்கிருதம், 2008-ல் கன்னடம், தெலுங்கு, 2013-ல் மலையாளம், 2014-ல் ஒரியா ஆகியவை செம்மொழி பட்டியலில் சேர்க்கப் பட்டன. இதற்காக அம்மொழி பேசப்படும் மாநிலங்களில் ஓர் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப் பட்டு அதன் வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகின்றன. இதன் வளர்ச்சிப் பொறுப்பு யூஜிசியிடம் அளிக்கப்பட்டுள்ளது. என்றாலும் இந்த திட்டம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளுக்கும் முறையாக அமல்படுத்தப்படாமல் உள்ளதாக புகார் நிலவுகிறது.