Published : 29 Nov 2021 03:05 AM
Last Updated : 29 Nov 2021 03:05 AM

70 நிறுவனங்களின் சந்தை மதிப்பு 100 கோடி டாலரானது; இந்தியாவில் ஸ்டார்ட் அப் துறை வளர்ச்சி: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

புதுடெல்லி

இந்தியாவில் ஸ்டார்ட் அப் காலாச்சாரம் வளர்ந்து வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலி வாயிலாக `மான் கி பாத்’ (மனதின்குரல்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அந்த வகையில் நேற்று நடைபெற்ற 83-வது நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

இந்தியாவில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மதிப்பு 100 கோடி டாலர் அளவுக்கு வளர்ந்துள்ளது. 2015-ம் ஆண்டில் இந்தியாவில் 9 முதல் 10 ஸ்டார்ட் அப்நிறுவனங்கள்தான் இருந்தன. ஆனால் இந்த ஆண்டு மிகப்பெருமளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பத்து நாளைக்கு ஒரு ஸ்டார்ட் அப் வீதம் இங்கு உருவாகிறது. கரோனா பெருந்தொற்று காலத்திலும் நமது இளைஞர்கள் பெரும்சாதனை புரிந்துள்ளனர். இப்போதுஉள்ள 70 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் சந்தை மதிப்பு 100 கோடி டாலராகும். இந்தியாவில் வேலை வாய்ப்பை உருவாக்குவதாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் திகழ்கின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்புகுறித்த ஸ்டார்ட் அப் நிறுவன தொழில் முனைவோர் மயூர் பாட்டீலுடன் நான் உரையாடினேன். இவரது நிறுவனம் வாகனங்களுக் கான வடிகட்டியை (ஃபில்டர்) உருவாக்கியுள்ளது.

இது வாகனங்களுக்கு அதிக மைலேஜ் தர உதவுவதோடு சுற்றுச்சூழல் பாதிப்பு வாயுக்கள் வெளியேறுவதையும் வடிகட்டுகிறது. இந்தவடிகட்டிகள் 10 பஸ்களுக்கு பொருத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதில் வாகனங்களின் எரிபொருள் சேமிப்பு விகிதம் 10%அதிகரித்தது. அத்துடன் புகை வெளியிடும் அளவு 40% குறைந்துள்ளது. இதற்கான காப்புரிமை இந்தஆண்டு வழங்கப்பட்டுள்ளது. தனது3 நண்பர்களுடன் இணைந்து உருவாக்கிய இந்த கண்டுபிடிப்புக்கு நிதி ஆயோக் அடல் நியூ இந்தியா போட்டி திட்டத்தின் மூலம் ரூ.90 லட்சம் மானியம் கிடைத்துள்ளது. இதன் மூலம் வணிக ரீதியில் அதிக எண்ணிக்கையில் இத்தகைய பில்டர்களை தயாரிக்கும் ஆலையை இவர்கள் உருவாக்க உள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்கப் போகிறேன் என்றாலே, பெற்றோர்கள் ஏதாவது வேலையில் சேருமாறு வலியுறுத்துவர். மாத சம்பளம் உத்திரவாதமாகக் கிடைக்கும் என்று சுட்டிக்காட்டுவர். ஆனால் இன்றுசுய தொழில் தொடங்க ஆர்வம் காட்டினால் அதை பெற்றோர்கள் ஊக்குவிக்கின்றனர். இது இந்தியாவின் வளர்ச்சிப் பாதையின் ஆரம்பம். இத்தகைய இளைஞர்கள்தான் புதிய வேலை வாய்ப்பை உருவாக்குகின்றனர். இவர்கள் வேலையைஎதிர்நோக்கி இருப்பவர்கள் அல்ல, மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிப்பவர்களாக பரிமளிக்கின்றனர்.

தூத்துக்குடி மக்களுக்குபாராட்டு

வரும் டிசம்பர் 6-ம் தேதி, இந்திய அரசியல் சாசனத்தை வடி வமைத்த டாக்டர் பாபா சாஹிப் அம்பேத்கரின் நினைவு நாளாகும். இந்த சமூகத்துக்கு மிகச் சிறந்த பங்களிப்பை அளித்த அவரை நாட்டு மக்கள் அனைவரும் நினைவுகூற வேண்டியது அவசியம்.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் பனை மரம் நட்டு மண் சரிவைத் தடுக்கும் மக்களை பெரிதும் பாராட்டுவதாக மோடி கூறினார். பனை மரங்கள் சூறாவளியைத் தாங்கி நிற்பதோடு மண் அரிப்பை தடுக்க உதவுகிறது. கடலோர பகுதிகளில் பனை மரங்கள் நடுவது மிகவும் பாராட்டுக்குரிய செயல் என்றும் அவர் கூறினார். இயற்கையை சீண்டினால்தான் அது நமக்கு மிகப் பெரும் ஆபத்தை விளைவிக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.

ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டம் மூலம் மருத்துவ பலன் பலருக்குக் கிடைத்துள்ளது என்றுகுறிப்பிட்ட அவர், இருதய பாதிப்புக்குள்ளாகி இத்திட்டம் மூலம் சிகிச்சை பெற்று குணமடைந்த ராஜேஷ் குமார் பிரஜாபதியுடன் உரையாடினார்.

கரோனா வைரஸ் முற்றிலுமாக ஒழிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது. அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. எனவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்

.- பிடிஐ

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x