Published : 29 Nov 2021 03:06 AM
Last Updated : 29 Nov 2021 03:06 AM

அவையை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள்; நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா தாக்கல்

புதுடெல்லி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் நாளில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. அவையை சுமுகமாக நடத்த ஒத்துழைக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடந்த ஓராண்டாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், கடந்த 19-ம் தேதி குருநானக் ஜெயந்தியன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 3 புதிய வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தார். பிரதமரின் அறிவிப்பை விவசாய சங்கங்கள் வரவேற்றாலும், நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை தொடருவோம் என தெரிவித்துவிட்டனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை நடக்க உள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாளில் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வகை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவர் ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்ட பிறகே 3 வேளாண் சட்டங்களும் அதிகாரபூர்வமாக ரத்தாகும்.

இதுதவிர, எரிசக்தி சேமிப்பு திருத்தமசோதா, மின்சார திருத்த மசோதா, கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை மசோதா, வங்கிகள் சட்டத் திருத்த மசோதா, போதைப் பொருள் தடுப்பு திருத்த மசோதா, டெல்லி சிறப்பு போலீஸ் நிர்வாக திருத்தச் சட்டம், மத்திய ஊழல் தடுப்பு ஆணைய திருத்த மசோதா உள்ளிட்ட 26 மசோதாக்கள் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன.

இதனிடையே, பல்வேறு முக்கிய பிரச்சினைகளை அவையில் எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்திருப்பதாகவும் மத்திய அரசு மவுனம் காப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் லஞ்சம் கைமாறியது குறித்த ஆவணங்கள் கிடைத்த பிறகும் இந்திய புலனாய்வுஅமைப்புகள் விசாரணை நடத்தவில்லை என்று பிரான்ஸ் ஊடகம் அண்மையில் செய்தி வெளியிட்டது. இந்த விவகாரங்கள் குறித்தும் பெகாசஸ் உளவு விவகாரம் குறித்தும் காங்கிரஸ் பிரச்சினை எழுப்பும் என்று தெரிகிறது.

மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கரோனா பெருந்தொற்று, பொருளாதார தேக்கநிலை, திரிபுரா வன்முறை குறித்தும் எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பக் கூடும். அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு தகுந்த பதில் அளிக்க ஆளும் பாஜக தரப்பும் தயாராக உள்ளது.

இந்நிலையில், கூட்டத் தொடரைசுமுகமாக நடத்துவது தொடர்பாக மத்திய அரசு சார்பில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. பிரதமர்நரேந்திர மோடி பங்கேற்காததால் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உட்பட 31 கட்சிகளைச் சேர்ந்தமூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, ‘‘அனைத்துக் கட்சி கூட்டம் ஆக்கப்பூர்வமாக இருந்தது. முக்கிய விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆரோக்கியமான விவாதத்துக்கு அரசு தயாராக உள்ளது’’ என்றார்.

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறும்போது, ‘‘நாடாளுமன்றத்தை சுமுகமாகநடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க அரசுதயாராக உள்ளது’’ என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:

கரோனா தடுப்பு நடவடிக்கைகள், சீனாவின் அத்துமீறல், பணவீக்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை, மகளிர் இடஒதுக்கீடு மசோதா, பெகாசஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை உறுதி செய்து சட்டம் இயற்ற வேண்டும். கரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதேபோல, மாநிலங்களவையை சுமுகமாக நடத்துவது தொடர்பாக அந்த அவையின் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவும் நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தினார். இதில் தேசிய, பிராந்திய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இன்று காலை அனைத்துக் கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசுவார் என்று கூறப்படுகிறது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x