

புதிய வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதற்காக, ஊழியர்களுக்காக நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வருங்கால வைப்பு நிதி (பிஎப்) சந்தா தொகையை முதல் 3 ஆண்டுகளுக்கு அரசே செலுத்தும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:
அமைப்புசார் துறையில் புதிய வேலைவாய்ப்பு உருவாவதை ஊக்குவிப்பதற்காக, அனைத்து புதிய ஊழியர்களுக்கும் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய 8.33 சதவீத பிஎப் பங்களிப்பு தொகையை 3 ஆண்டுகளுக்கு அரசே செலுத்தும். இதன்மூலம் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வழங்கவும், அமைப்புசாரா தொழிலாளர்களை அமைப்புசார் முறைக்குக் கொண்டுவரவும் நிறுவனங்கள் முன்வரும்.
மாத சம்பளம் ரூ.15 ஆயிரம் வரை பெறும் ஊழியர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும். இதற்காக வரும் நிதியாண்டுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும்.
வரும் 2016-17 நிதியாண்டின் முடிவில் 100 மாதிரி வேலைவாய்ப்பு மையங்கள் உருவாக்கப்படும். அவை மாநில வேலைவாய்ப்பு மையங்களுடன் இணைக்கப்படும். சில்லறை விற்பனை துறையில் கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக, மாதிரி கடை மற்றும் நிறுவன மசோதாவை மாநில அரசுகள் விரும்பினால் நிறைவேற்ற அனுமதி வழங்கப்படும்.
ஷாப்பிங் மால்களைப் போலவே தாங்கள் விரும்பினால் வாரத்தின் 7 நாட்களும் செயல்பட சில்லறை விற்பனை மையங்களுக்கு அனுமதி வழங்க இந்த மசோதா வகை செய்யும். அதேநேரம், ஊழியர்களுக்கு வார விடுமுறை மற்றும் பணி நேரம் ஆகியவை வரையறுக்கப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.