

வினாத்தாள் வெளியானதால் உத்தரப்பிரதேசத்தில் நேற்று நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
உத்தரபிரதேசத்தில் நேற்று ஆசிரியர் தகுதித் தேர்வு நடப்பதாக இருந்தது. மாநிலம் முழுவதும் சுமார் 20 லட்சம் பேர் தேர்வு எழுத இருந்தனர். ஆனால், தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படை போலீஸார் நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் நடத்திய சோதனைகளில் மாநிலம் முழுவதும் 23 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வினாத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அரசுக்கு முறைப்படி போலீஸார் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
லக்னோவில் பேட்டியளித்த ஆரம்பக் கல்வி அமைச்சர் சதீஷ் திவிவேதி கூறுகையில், ‘‘வினாத்தாள் வெளியானதால் ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள் வெளியானது தொடர்பாக சிறப்பு அதிரடிப்படை போலீஸார் மூலம் விசாரணை நடத்தப்படும். இன்னும் ஒரு மாதத்தில் மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும். தேர்வு ரத்தானது தெரியாமல் தேர்வு எழுதுவதற்காக தேர்வு மையங்களுக்கு வந்தவர்கள் தங்கள் தேர்வுக்கான அனுமதி அட்டையைக் காட்டினால் அவர்கள் அரசு பஸ்களில் இலவசமாக வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.