

அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சிக்கு கூட்டுறவு மாதிரிதான் சிறந்தது என மத்திய அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குஜராத் கூட்டுறவு பால் சந்தை கூட்டமைப்பின் சார்பில், காந்திநகரில் நிறுவப்பட்டுள்ள பால் பவுடர் தொழிற்சாலை உள்ளிட்ட சில திட்டங்களை மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டுக்கு எது மாதிரியான பொருளாதார மாதிரி சரியானதாக இருக்கும் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் அனைவருக்குமான வளர்ச்சியை உறுதி செய்வது என்பது கடினமான ஒன்றுதான்.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக பதவி வகித்தபோது, அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் அனைவருக்குமான வளர்ச்சியை உறுதி செய்வதற்கு கூட்டுறவு மாதிரிதான் சிறந்தது என்பதை உணர்ந்தார்.
அனைவருக்கும் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கான திறன் கூட்டுறவுக்கு உள்ளது. இதற்கு உதாரணமாக ‘அமுல்’ மாதிரி விளங்குகிறது. 36 லட்சம் பேர் இணைந்து செயல்படுவதே அமுல் நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். இந்த மாதிரி சிறந்த உதாரணமாகவும் பெண்கள் அதிகாரத்தின் சோத னைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகவும் விளங்குகிறது. இவ்வாறு அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். - பிடிஐ