

பாஜக எம்எல்ஏவால் தாக்கப்பட்ட உத்தராகண்ட் காவல் துறையில் பணியாற்றிய சக்திமான் குதிரையின் அடிபட்ட கால் அறுவை சிகிச்சை மூலம் வியாழக்கிழமை மாலை அகற்றப்பட்டது.
குதிரையின் உயிரை காக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உத்தராகண்ட் போலீஸ் டிஜிபி பி.எஸ்.சித்து தெரிவித்தார். காலை அகற்றாவிட்டால் கிருமி தொற்று காரணமாக குதிரை உயிரிழக்கக்கூடும் மருத்துவர்கள் கூறியதையடுத்து அதன் கால் அகற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சக்திமான் குதிரை உணவருந்த மறுத்துவருகிறது.
உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த 7 ஆண்டுகளாக சக்திமான் வெள்ளை குதிரை காவல் துறையில் பணியாற்றி வருகிறது. முக்கியமான நிகழ்ச்சிகளின்போது நடைபெறும் காவல் துறை அணிவகுப்பில் இந்த குதிரை பங்கேற்று வந்தது.
இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் மாநில அரசுக்கு எதிராக பாஜக சார்பில் அண்மையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பாஜக எம்எல்ஏ கணேஷ் ஜோஷி சக்திமான் குதிரையை தாக்கினார். இதனால் அதன் கால் முறிந்தது.
எம்எல்ஏ ஜோஷியின் செய்கைக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது.
இந்த விவகாரத்தில், பாஜக எம்.எல்.எ ஜோஷி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை இன்று (வெள்ளிக்கிழமை) காலை போலீஸார் கைது செய்துள்ளனர். ஒரு உணவு விடுதியிலிருந்து வெளியே வந்த அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். எம்.எல்.ஏ. கைது செய்த விதத்தை கண்டித்து பாஜகவினர் சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் அமளி நிலவியது.
குதிரையை தாக்கியதாக பாஜகவைச் சேர்ந்த பிரமோத் போரா என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.