

ஆந்திராவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள செம்மரங்களை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர வனப் பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தப் படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க பல் வேறு நடவடிக்கைகளை போலீ ஸாரும், வனத்துறையினரும் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடப்பா மாவட்டம், ரயில்வே கோடூரு அருகே உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் நேற்று காலை அதிரடிப் படையினர் மற்றும் வனத்துறையினர் கூட்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது மலையின் ஒரு பகுதியில் செம்மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கூட்டுப் படையினர் கண்டறிந்தனர். பின்னர் அந்த செம்மரங்களை கூட்டுப் படையினர் பறிமுதல் செய்து திருப்பதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்துக்கு எடுத்து வந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்த செம்மரங்களின் மதிப்பு ரூ. 2 கோடி என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக கூட்டுப்படையினரை கண்டதும் அங்கிருந்த கூலித் தொழிலாளர்கள் அனைவரும் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.