Last Updated : 17 Mar, 2016 08:17 PM

 

Published : 17 Mar 2016 08:17 PM
Last Updated : 17 Mar 2016 08:17 PM

உ.பி. போலீஸாரை தாக்கிய மாபியா கும்பல்: நடவடிக்கை எடுத்த தமிழ் ஐபிஎஸ் அதிகாரியை மாற்றிய அகிலேஷ்

உ.பி.யில் மணல் மாபியாவை கைது செய்ய வந்த போலீஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுத்த தமிழரான ஐபிஎஸ் அதிகாரியை முதல் அமைச்சர் அகிலேஷ் உடனடியாக இடமாற்றம் செய்துள்ளார்.

உபியின் சம்பல் பகுதியில் அமைந்துள்ள மாவட்டம் ஜலோன். இங்குள்ள பந்தோலி எனும் கிராமத்தில் ஓடும் யமுனையின் கிளை ஆறான பேத்துவா ஓடுகிறது. இதில் சட்டவிரோதமாக அவ்வப்போது மணல் அள்ளப்படுவது வழக்கமாக உள்ளது. இதில் நேற்று காலை மணல் மாபியா மற்றும் பந்தோலி கிராமவாசிகளுக்கு இடையே மோதல் நிகழ்ந்துள்ளது. இங்கு மணல் மாபியா கிராமத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதனால் நான்கு கிராமத்தினர் குண்டுகள் பட்டு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனங்கள் 4 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் 3-ம் தீக்கிரையாக்கபட்டுள்ளது இதை கேள்விப்பட்டு அங்கு சென்ற இரு ஜலோன் போலீஸாரையும் பிணையமாக பிடித்து வைத்த அந்த கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது. இவர்கள் நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளனர். இதற்காக, சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற ஜலோன் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரான என்.கொளஞ்சி மீதும் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ததுடன், உடனடியாக சம்மந்தப்பட்டவர்களை கைது செய்யும்படி உத்தரவிட்டுள்ளார் கொளஞ்சி. இதை எதிர்த்து அப்பகுதியின் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏவான தயாசங்கர் போராட்டம் நடத்தியுள்ளார். இதற்கு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஆளும் சமாஜ்வாதிக் கட்சிக்கு வேண்டிய சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது காரணம் எனக் கூறப்படுகிறது. எனவே, அவர்கள் வலியுறுத்தலின் பேரில் உ.பி.அரசு கொளஞ்சிக்கு ஜலோனில் இருந்து அதேதினம் இடமாற்றம் செய்துள்ளது. இவர் ஆக்ராவின் ரயில்வே கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கொளஞ்சியின் இடத்தில் பப்ளு குமார் எனும் ஐபிஎஸ் அதிகாரி அமர்த்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் உ.பி.யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், சமீபத்தில் உபி காவல்துறையின் தலைமை இயக்குநர் ஜெனரலான ஜாவீத் அகமது அனைத்து மாவட்டக் கண்காணிப்பாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதில், காக்கி சீருடையை களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். ஆனால், உபி டிஜிபியின் உத்தரவை அமல்படுத்திய தமிழரான கொளஞ்சிக்கு பரிசாக இடமாற்றல் உத்தரவு கிடைத்துள்ளது. உ.பி. கேடர் 2008 பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான கொளஞ்சி கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் ஆவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x