கரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு; அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பேசிய காட்சி  | படம் ஏஎன்ஐ
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பேசிய காட்சி | படம் ஏஎன்ஐ
Updated on
2 min read

கரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் என இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. எந்தவிதமான இடையூறும் இன்றி கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி டிசம்பர் 23 ஆம் தேதிவரை நடக்கிறது. இந்தக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த வேண்டும், அமளி இல்லாமல் கொண்டு செல்ல வேண்டும் என்பதால், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு சார்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

31 கட்சிகளின் சார்பில் 42 பிரதிநிதிகள் இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலா்த் ஜோஷி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:

31 கட்சிகளைச் சேர்ந்த 42 தலைவர்கள் இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை நடத்தினர். எந்தவிதமான இடையூறுகள், அமளி இல்லாமல் அவையை நடத்திச் செல்ல மாநிலங்களவைத் தலைவர், மக்களவை தலைவர் தயாராக இருக்கிறார்கள்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு அதிகமான முன்னுரிமை கொடுக்கும்” எனத் தெரிவித்தார்.இதற்கிடையேஇந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் 26 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ பணவீக்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விவசாயிகள் பிரச்சினை,கரோனா விவகாரம், கரோனாவி்ல் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு ஆகியவை குறித்து இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசினோம். விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) உறுதி செய்ய சட்ட அங்கீகாரம் அளிக்கும் மசோதாவை கொண்டுவர அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தினர்.

கரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்கிட வேண்டும், வேளாண் போராட்டத்தில் பங்கேற்று உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தாருக்கு நிதியுதவி வழங்கிட வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தோம்.

பிரதமர் மோடி இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பார் என எதிர்பார்த்தோம். ஆனால், சில காரணங்களால் அவர் வரவி்ல்லை. மத்தியஅரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றிருக்கிறது.

ஆனால், பிரதமர் மோடியோ விவசாயிகளுக்கு சட்டங்களை புரியவைக்க முடியவில்லை என்றார். அதாவது இந்த சட்டம் புரியும் வடிவில் வேறுவடிவில் வரலாம்” எனத் தெரிவித்தார்

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜந்நாத் சிங், மத்திய அமைச்கள் பியூஷ் கோயல், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in