Last Updated : 28 Nov, 2021 02:35 PM

 

Published : 28 Nov 2021 02:35 PM
Last Updated : 28 Nov 2021 02:35 PM

காங்கிரஸை ஓரம்கட்டும் மம்தா: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பு; காங்கிரஸ் கூட்டத்தைப் புறக்கணிக்கும் திரிணமூல் காங்கிரஸ்

திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி | கோப்புப்படம்

புதுடெல்லி


மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் தலைமையில் கூட்டும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளது.இதன் மூலம் காங்கிரஸ் கட்சியைப் புறக்கணித்து, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைக்கும் பணியை திரிணமூல் காங்கிரஸ் கையில் எடுக்க உள்ளது.

நாளை குளிர்காலக் கூட்டத் தொடங்கும்போது, எதிர்க்கட்சிகளிடையே கருத்தொற்றுமையை உருவாக்க காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டத்தை நாளை காலை கூட்டியுள்ளார். ஆனால் அந்த கூட்டத்தில் பங்கேற்க திரிணமூல் காங்கிரஸ் தயாராக இல்லை எனத் தெரிகிறது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில் “ குளிர்காலக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை காங்கிரஸ் கட்சி செய்வதில் எங்களுக்கு உடன்பாடில்லை, விருப்பமும் இல்லை. முதலில் காங்கிரஸ் கட்சி தங்களுக்குள் கருத்தொற்றுமையை உருவாக்க வேண்டும், அந்தக் கட்சியின் தலைமை பிறப்பிக்கும் உத்தரவை அந்தக் கட்சி எம்.பி.க்கள் பின்பற்றட்டும் அதன்பின் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியைச்செய்யட்டும்.

பாஜகவை எதிர்க்கும் தீர்மானம் இல்லாமல் காங்கிரஸ் கட்சி இருக்கும் போது அவர்களுக்குப் பின்னால் நிற்கத் தயாராக இல்லை. மக்கள் நலனை முன்வைத்து நாடாளுமன்றத்தில் பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகளை நாங்கள் ஒருங்கிணைப்போம். ஆனால், காங்கிரஸ் கட்சி நாளை கூட்டம் கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம்” எனத் தெரிவி்த்தார்

இதற்கிடையே திரிணமூல் காங்கிரஸ் கட்சி நாளை தேசிய அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டத்தை கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி இல்லத்தில் நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் குளிர்காலக் கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள், விவகாரங்கள், பேசவேண்டியவைகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. பாஜகவை எதிர்க்கும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துவிட்டதால், திரிணமூல் காங்கிரஸ் கட்சி அந்தப் பணியைச் செய்ய இருக்கிறது.

சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏராளமானோர் முக்கிய நிர்வாகிகள், தலைவர்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு மாறியுள்ளனர். இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே வெளிப்படையான அதிருப்தி இல்லாவிட்டாலும் உள்ளுக்குள் புகைந்து வருகிறது.

கடந்தவாரம் டெல்லி சென்றிருந்த திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பான்ஜியிடம் நிருபர்கள், “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க திட்டமிருக்கிறதா” எனக் கேட்டனர். அதற்கு மம்தா பானர்ஜி “ ஒவ்வொரு முறையும் டெல்லி வரும்போது சோனியா காந்தியை சந்திக்க வேண்டும் என்று அரசியலமைப்புச்சட்டத்தில் கூறப்படவில்லை” எனத் தெரிவித்தார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியை ஓரம் கட்டி எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை திரிணமூல் காங்கிரஸ் கட்சி பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x