Published : 28 Nov 2021 11:43 AM
Last Updated : 28 Nov 2021 11:43 AM
தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து வருவோர் கண்டிப்பாக பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இரு தடுப்பூசிகளை செலுத்தியிருந்தாலும் இந்த பரிசோதனை கட்டாயம் என கர்நாடகஅரசு கிடுக்கிப்பிடி உத்தரவிட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக இந்த ஓமைக்ரான் வகை ைவரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.
இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். இதனால் உலக நாடுகள் தென்ஆப்பிரிக்காவிலிருந்து வருவோருக்கு ஏராளமான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவும் தென்ஆப்பிரிக்கா, ஹாங்காங், இஸ்ரேல், போத்ஸ்வானா ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில் கர்நாடக அரசும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த மாநில அரசு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:
போட்ஸ்வானா, ஹாங்காங், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கரோனா வைரஸின் உருமாற்றமான ஓமைக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான பரிசோதனையும், கட்டுப்பாடுகளும் இருக்கும்.
இந்த நாடுகளில் இருந்துவரும் வெளிநாட்டினர், உள்நாட்டு மக்கள் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் கண்டிப்பாக பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அந்தப் பரிசோதனையில் நெகட்டிவ் வரும்பட்சத்தில் மட்டுமே அவர்கள் விமானநிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நாடுகளில் இருந்து கடந்த 15 நாட்களுக்கு முன் வந்தவர்கள் அனைவரும் கண்காணிக்கப்படுவார்கள். அவர்கள்அடையாளம் காணப்பட்டு பிசிஆர் பரிசோதனை செய்யப்படும். பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், 10 நாட்கள் அரசின் கண்காணிப்பு முகாமில் வைக்கப்படுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த 1ம்தேதி முதல் 26ம் தேதிவரை பெங்களூருவுக்கு 584 பேர் மத்தியஅரசின் கண்காணிப்பு பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வந்துள்ளனர். இதில் 94 பேர் மட்டும் தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் நாடுகளி்்ல் இருந்து வந்துள்ளனர். இவர்களில் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!