

நாடு முழுவதிலும் உள்ள மதரஸாக்களை மூடுவோம் என உத்தரப்பிரதேச இணை அமைச்சர் எச்சரித்துள்ளார். இது, அம்மாநில சட்டப்பேரவை தேர்தலின் மதவாதப் பிரச்சாரத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
பாஜக ஆளும் உபியில் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரங்களை அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன.
இங்கு மீண்டும் ஆட்சி அமைப்பதில் பாஜக தீவிரம் காட்டுகிறது. இச்சூழலில், மதக்கலவரங்கள் அதிகம் நடைபெற்ற அலிகர் நகருக்கு உபியின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் ரகுராஜ்சிங் வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுராஜ்சிங் கூறுகையில், 'என்னை கடவுள் ஆசீர்வதித்தால் நான் நாட்டின் அனைத்து மதரஸாக்களையும் மூடிவிடுவேன். ஏனெனில், மதரஸாக்கள் ஒரு தீவிரவாதிகள் கூடாரமாக உள்ளது. இவற்றில் தீவிரவாதப் பயிற்சிகளும் அளிக்கப்படுவதால் அதில் படிப்பவர்கள் தீவிரவாதிகளாகி விடுகின்றனர்' எனத் தெரிவித்தார்.
இவரது கருத்து உபி சட்டப்பேரவை தேர்தலுக்கான மதப்பிரச்சாரத் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. உபியில் இருந்த வெறும் 250 மதரஸாக்கள் எண்ணிக்கை தற்போது 22,000 என உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், தனது தகவலுக்கான ஆதாரங்களை அளிக்கவில்லை.
அமைச்சர் ரகுராஜ்சிங்கின் கருத்தின் மீது உபி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான சுரேந்திராசிங் ராஜ்புத் கூறும்போது, ''எந்த மதரஸாவில் நாதுராம் கோட்ஸே பயின்று, நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றார் என்பதையும் அமைச்சர் வெளியிட வேண்டும்'' என்றார்.
இந்நிலையில், பாஜக தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. எனவே, அலிகர் போன்ற பதட்டமான பகுதிகளில், தேர்தலுக்கு முன்பாக பாஜகவினர் மதவாதப் பிரச்சாரத்தை தொடங்கி இருப்பதாகக் கருதப்படுகிறது.