

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர்ப.சிதம்பரம், அவர் மகன் கார்த்திசிதம்பரம் இருவருக்கும் டெல்லிநீதிமன்றம் சம்மன் பிறப்பித்துள்ளது.
2006-ல் மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல்கம்யூனிகேசன் சர்வீசஸ் ஹோல்டிங்க்ஸ், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழுவின் அனுமதியைப் பெறாமல், விதிமுறைகளை மீறி அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் மூலம் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அனுமதி அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. நீண்ட காலமாக நடந்து வரும் இந்த வழக்கில் தற்போது சிபிஐயும் அமலாக்கத் துறையும் டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளன.
மத்திய விசாரணை அமைப்புகள் சார்பாக வாதாடும் கூடுதல்சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் நீதிமன்றத்தில் கூறும்போது, "இந்த வழக்கு தொடர்பாக மத்திய விசாரணை அமைப்புகள் பல்வேறு நாடுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளன. இதன் மூலம்இந்த விவகாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. சிபிஐ புதிய ஆதாரங்களை விசாரித்து வருகின்றன" என்றார்.
இதையடுத்து, மத்திய விசாரணை அமைப்புகளின் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட டெல்லி நீதிமன்றம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு சம்மன் பிறப்பித்துள்ளது.