

புதுடெல்லி: இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி உச்ச நீதிமன்றம் சார்பில் நேற்று நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:
நீதி, நேர்மை, நல்ல நோக்கத்துடன் நீதிபதிகள் தீர்ப்பு வழங்குகின்றனர். நீதிபதிகள் பிறப்பிக்கும் உத்தரவுகள், தீர்ப்புகள், கருத்துகளுக்கு பல்வேறு வகையில் அர்த்தம் கற்பிக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இத்தகைய போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நீதிபதிகள் மிகுந்த கவனத்துடன் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.
அகில இந்திய நீதித் துறை பணிகளுக்கு திறமையானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இதன்மூலம் நீதித் துறை வலுவடையும். இந்தியா போன்ற வளர்ந்த நாடுகளில் நீதிமன்றங்களை நாடுவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.
இவ்வாறு ராம்நாத் கோவிந்த் பேசினார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா பேசும்போது, "ஜனநாயகத்தில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதேநேரம் அவற்றின் கருப்பு பக்கம் கவலையளிக்கிறது. சமூக வலைதளங்களில் நீதிபதிகள் குறித்த விமர்சனம் அதிகரித்து வருகிறது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும். நீதிமன்றங்களின் அடிப்படை உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். அப்போதுதான் வழக்குகள் தேங்கும் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்" என்றார்.