

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து களை குறைக்க ஓட்டுநர் அமரும் அறையில் ஏசி வசதி கட்டாய மாக்கப்படும், சுங்கச்சாவடிகளில் எடை மேடை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அதிகரித்து வரும் சாலை விபத்துக்களை தடுக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்தியப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் கூறியதாவது:
தேசிய நெடுஞ்சாலையின் நீளத்தை 96,000 கி.மீட்டரில் இருந்து 2 லட்சம் கி.மீட்டராக அதிகரிப்பதன் மூலம் சாலை விபத்துக்களை கணிசமாக குறைக்க முடியும். கடந்த 2014-ல் சாலை விபத்தில் சிக்கி 1,39,671 பேர் உயிரிழந்துள்ளனர். சாலை வடிவமைப்பில் ஏற்பட்ட பற்றாக்குறையே இந்த விபத்துகளுக்கு காரணம். எனவே தேசிய நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தவும், அதன் தூரத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அடுத்து வரும் 5 ஆண்டுகளில் சாலை விபத்துக்களை 50 சதவீதம் வரை குறைக்க அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் விபத்து பகுதியாக அடையாளம் காணப்பட்ட 726 சாலைகளை சீரமைப்பதற்காக ரூ.11,000 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. தவிர இரு வழி நெடுஞ்சாலைகள், நான்கு வழி நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. விபத்துகளில் சிக்கியவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்கவும் நெடுஞ்சாலைகளில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்படும்.
தொடர்ச்சியாக 12 மணி நேரம் வரை ஓட்டுநர்கள் லாரிகளை இயக்குவதால், அதிக அளவில் வியர்வை வெளியேறி மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனால் விபத்துகளும் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க லாரி ஓட்டுநர் அறையில் ஏசி வசதி செய்யப்படுவது இனி கட்டாயமாக்கப்படும்.
எக்ஸ்பிரஸ் சாலைகள்
நாடு முழுவதும் விரைவான சாலை போக்குவரத்துக்காக, உலகத்தரம் வாய்ந்த 10 எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளை அமைப்பது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகள் 6 வழி அல்லது அதற்கு மேற்பட்டதாக அமைக்கப்படும். இந்த சாலைக்குள் நுழைவது மற்றும் வெளியேறுவதற்காக சரிவு பாதைகள் அமைக்கப்படும்.
அதிக அளவு சுமைகளை ஏற்றிச் செல்லும் லாரிகளால் பிரச்சினைகள் ஏற்படுவது உண்மையே. ஊழல் காரணமாக இத்தகைய லாரிகள் நெடுஞ்சாலைகளில் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. இதை தவிர்க்க சுங்கசாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் எடை மேடைகள் அமைக்கப்படும்.
கிராமப்புறத்தில் ஓட்டுநர் பள்ளி
போதிய அளவுக்கு நாட்டில் ஓட்டுநர் பள்ளிகள் செயல்படாததும் கவலைக்குரியது. இந்த பிரச் சினைக்கு தீர்வு காணும் வகையில் கிராமப்புறங்களில் மத்திய அரசு சார்பில் 19 ஓட்டுநர் பள்ளி மையங்கள் துவக்கப்படும்.
இந்த பள்ளிகள் மூலம் உடற்தகுதி சான்றிதழ், மாசு சான்றிதழ் வழங்கப்படும். தவிர கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் வாகன தகுதி மற்றும் மாசு சான்றிதழ் வழங்குவதற்கான 5000க்கும் மேற்பட்ட மையங்கள் துவக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.