

ஆதார் எண்ணுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து அளிக்கும் மசோதாவை நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.
மத்திய அரசின் மானியத் திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் இந்த மசோதா, நிதி மசோதாவாக தாக்கல் செய்யப் பட்டது.
இதற்கு மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எதிர்ப்பு தெரிவித்தார். “இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் ஒத்து ழைப்பு அளிக்கத் தயாராக உள்ளது. ஆனால் மாநிலங்களவையை தவிர்க்கும் வகையில் நிதி மசோதா வாக தாக்கல் செய்யப்பட்டதை எதிர்க்கிறோம்” என்றார்.
பிஜு ஜனதா தளம் உறுப்பினர் பர்துருஹரி மஹதாப்பும் இந்த மசோதாவுக்கு ஆட்சேபம் தெரிவித்தார். முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆதார் மசோதா நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு ஜேட்லி, “முந்தைய அரசின் மசோதாவை காட்டிலும் தற்போதைய மசோதா பெருமளவு மாறுபட்டுள்ளது. மானியம் பெறும் அனைவரும் ஆதார் எண்ணை தரவேண்டும் என்பதே இதன் பொருள். இதை நிதி மசோதாவாக ஏற்பது குறித்து சபாநாயகர் முடிவு செய்வார்” என்றார்.