Last Updated : 27 Nov, 2021 03:40 PM

 

Published : 27 Nov 2021 03:40 PM
Last Updated : 27 Nov 2021 03:40 PM

ஒமைக்ரான் கரோனா வைரஸ் தீவிர அச்சுறுத்தலாக இருக்கும்: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி | கோப்புப்படம்

புதுடெல்லி

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதியவகை உருமாற்ற கரோனா வைரஸான ஒமைக்ரான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். இந்தியாவின் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை நீண்ட நாட்களுக்கு மறைக்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல் முறையாக இந்த ஒமைக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாகவும் இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

ஒமைக்ரான் வைரஸ் அச்சத்தால் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதேபோன்று இந்தியாவும், தென் ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பது, அல்லது விமானங்களைத் தடை செய்வது குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

ஹாங்காங், இஸ்ரேலில் இருந்துவரும் பயணிகளுக்குக் கூடுதலான பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், குறிப்பாக இந்தியாவுக்கு வந்தபின் அந்தப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனையும், தனிமைப்படுத்துதலும் இருக்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் மத்திய அரசுக்குத் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தக் கோரி எச்சரித்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், “கரோனா வைரஸில் புதிய வகையான வைரஸ் (ஒமைக்ரான்) பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். நம்முடைய தேசத்தில் உள்ள மக்கள் ஒவ்வொருக்கும் தடுப்பூசி மூலம் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு தீவிரமான கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. ஒருவரின் புகைப்படத்துக்குப் பின்னால், தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான மோசமான, எண்ணிக்கையை மறைத்து வைக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை 121.06 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கரோனா முதல் அலை வந்தபோதும் இதேபோன்று ராகுல் காந்தி முதல் நபராக மத்திய அரசை எச்சரித்தார். மிகப்பெரிய சுனாமி நமது நாட்டை நோக்கி வருகிறது என்று ராகுல் காந்தி எச்சரித்தார், ஆனால் அதை மத்திய அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

2-வது அலை வருவதற்கு முன்பும் ராகுல் காந்தி மத்திய அரசை எச்சரித்தார். பொருளாதாரச் சரிவும், கரோனா தடுப்பு முறைகளையும், லாக்டவுனை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் விமர்சித்து எச்சரித்தார். இப்போது ஒமைக்ரான் வைரஸ் குறித்து ராகுல் காந்தி எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்து.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x