நீதி வழங்க முடியாத நிலையில் அரசியலமைப்புச் சட்ட நாள் கொண்டாடுவதில் என்ன பயன்?- பிரியங்கா காந்தி கேள்வி

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி | கோப்புப்படம்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி | கோப்புப்படம்
Updated on
2 min read

உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் ஒரு தொழிலாளியும், அவரின் குடும்பத்தாரும் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை நீதி வழங்க முடியாத நிலையில் அரசியலமைப்புச் சட்ட நாள் கொண்டாடி என்ன பயன் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உ.பி. அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரயாக்ராஜ் மாவட்டத்தில் சரோன் தொகுதியில் பூல்சந்த் பாசி என்ற தொழிலாளி, அவரின் மனைவி மீனு (40), மகள் சப்னா (17), மகன் சிவா (10) ஆகியோர் சமீபத்தில் கொல்லப்பட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் வீட்டில் கொல்லப்பட்டுக் கிடந்தது பெரும் சர்ச்சையானது.

பூல்சந்த் குடும்பத்தினர் எஸ்சி, எஸ்டி பிரிவில் அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் மீது புகார் அளித்ததையடுத்து, பூல்சந்த் குடும்பத்தினர் கொல்லப்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியானது. ஆனால், இதுவரை கொல்லப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவில்லை.

இந்நிலையில் பிரயாக்ராஜில் உள்ள தொழிலாளியின் குடும்பத்தினரையும், உறவினர்களையும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அதன்பின் அவர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''கொல்லப்பட்ட தொழிலாளியின் சகோதரர் நாட்டைக் காவல் காக்கும் சாஷ்த்ரா சீமா பால் படைப்பிரிவில், நக்சலைட்டுகள் அதிகமாக இருக்கும் பகுதியில் பணியாற்றி வருகிறார். ஆனால், நாட்டுக்காக அவர் சேவை செய்தும் அவருக்குக் கிடைத்தது என்ன? ஏன் அவருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை?

இந்த ஆளும் அரசால், நிர்வாகத்தால் நீதி வழங்க முடியாத நிலையில், அரசியலமைப்புச் சட்ட நாள் கொண்டாடி என்ன பயன்? அரசியலமைப்புச் சட்டம் அழிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் அந்தச் சட்டம் முடிவுக்கு வந்துவிட்டது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அச்சத்தில் இருக்கிறார்கள். சிலர் வந்து மிரட்டும்போது போலீஸார் உதவி செய்யாவிட்டால் என்ன செய்வது எனக் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் அச்சப்படுகிறார்கள். காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளிக்கச் சென்றால், கிண்டல் செய்து சிரிக்கிறார்கள். இவ்வாறு இருந்தால் புகார் எவ்வாறு வழங்குவது என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண் வேதனைப்படுகிறார்.

கடந்த செப்டம்பர் மாதம் இந்தக் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீண்டும் வந்து மிரட்டியுள்ளனர். கடந்த ஆண்டிலும் இதேபோன்று சம்பவம் நடந்துள்ளது. ஏன் இந்த சமூக விரோதிகளைக் காவல்துறையால் தடுக்க முடியவில்லை, அந்தக் குடும்பத்தினருக்கு ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை?
உத்தரப் பிரதேசத்தில் தலித்துகள், சிறுபான்மையினர்கள், விவசாயிகள், பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே நீதி கிடைக்கிறது.”

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in