

கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் எஸ்.டி.எம். மருத்துவக் கல்லூரியில் படிக் கும் 30 மாணவர்களுக்கு கடந்த புதன்கிழமை உடல்நிலை பாதிக்கப்பட்டது. அங்கு படிக்கும் 400 மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
முதல் கட்டமாக 66 மாணவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது கட்ட பரிசோதனை முடிவில் 116 மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.
ஒரே கல்லூரியில் 182 மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து தார்வாட் மாவட்டஆட்சியர் நித்தேஷ் பாட்டீல், சுகாதாரத் துறை அலுவலர் யஷ்வந்த், மணிப்பால் மருத்துவமனையில் கண்காணிப்பாளர் மருத்துவர் சுதர்ஷன் பல்லால் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கல்லூரியில் நேற்று ஆய்வு செய்தனர்.
ஆட்சியர் நித்தேஷ் பாட்டீல்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்க உத்தரவிட்டார். அங்குள்ள 2 மாணவர் விடுதிகளுக்கும் சீல் வைத்தார். அடுத்த இரு வாரங்களுக்கு நேரடி வகுப்புகளை ரத்து செய்து, ஆன்லைன் மூலமாக கற்பிக்க உத்தரவிட்டார்.
ஆட்சியர் நித்தேஷ் பாட்டீல் கூறும்போது, ‘‘182 மாணவர்களும் நலமாக இருக்கின்றனர். கல்லூரியிலேயே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 182 மாணவர்களும் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது. எனவே தொற்று யாரையும் தீவிரமாக பாதிக்கவில்லை. கடந்த 17ம் தேதி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 200 மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் பங்கேற்றனர். அந்தநிகழ்ச்சியின் மூலமாக தொற்று பரவி இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். எனவே அதில் பங்கேற்றமாணவர்கள், பெற்றோர், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரையும் சோதனைக்கு உட்படுத்த இருக்கிறோம்’' என்றார்.
இதனிடையே கர்நாடக சுகாதாரத் துறை, ‘‘நேற்று புதிதாக 356 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்த 6,992 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தொற்றுக்கு 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்'' என தெரிவித் துள்ளது.
இதற்கிடையில், பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் அருகேயுள்ள தனியார் சர்வதேச உறைவிடப் பள்ளியில் பயின்று வரும் 40 மாணவர்களுக்கும், ஒரு ஆசிரியருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட் டுள்ளது தெரிய வந்துள்ளது. 41 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.