

கங்கை நதியில் குரோமியம் உட்பட பல்வேறு ரசாயன கழிவுகள் கலப்பதை தடுக்க, 5 நபர் கொண்ட நிபுணர்கள் குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்துள்ளது.
பல மாநிலங்களைக் கடந்து ஓடும் கங்கை நதியில் ஏராளமான தொழிற்சாலை கழிவுகள் கலக்கின் றன. அதை தடுத்து கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. எனினும், உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் தொழிற்சாலைகளில் இருந்து குரோமியம் உட்பட ரசாயன கழிவுகள் கங்கையில் கலக்கின்றன.
குறிப்பாக உ.பி.யின் ஜாஜ்மா, ரனியா, ராக்கி மண்டி, கான்பூர் டெஹாட், கான்பூர் நகர் மற்றும் சில பகுதிகளில் இந்தப் பிரச்சினை அதிகமாக உள்ளது. சில இடங்களில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுகள் சட்டவிரோதமாக கங்கையில் கலக்கின்றன. இதனால்உள்ளூர் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. மேலும், குடிநீர் மோசமடைந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான வழக்கை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்து அவ்வப்போது உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது.எனினும், கங்கை நதியில் கழிவுகள் கலப்பது தொடர்ந்து கொண்டுள்ளது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்து அளித்த உத்தரவில் கூறியிருப்ப தாவது:
கங்கையில் குரோமியம் உட்பட ரசாயன கழிவுகள் கலப் பதை தடுக்க, 5 நிபுணர்கள் கொண்ட குழுவை அமைப்பது அவசியம் என்று கருதுகிறோம். எனவே, உ.பி. தலைமை செயலர் தலைமையில் 5 நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்கிறோம். அதில், சுற்றுச்சூழல், வனம்மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வரும் மத்திய அரசின் அமைப்பு, உ.பி. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கான்பூர் டெஹாட், கான்பூர் நகர் மாவட்ட ஆட்சியர்கள் கொண்ட குழுவை நியமிக்கிறோம்.
பொறுப்பு ஏஜென்சி
கங்கை நதியில் கழிவுகள் தடுக்கும் பொறுப்பு ஏஜென்சிகளாக மத்திய மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் இருக்கும். கங்கை நதியில் கழிவுகள் கலக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்த இரு துறைகளும் 2 வாரங்களுக்குள் செயல் திட்டத்தை தயாரிக்க வேண்டும். அத்துடன் மேற்கொண்டு கங்கை யில் கழிவுகள் கலப்பதைத் தடுப்பதாக இருக்க வேண்டும். மேலும், கங்கை நதியில் கழிவுகள் கலப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் நிலை குறித்து 2022-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும்.
ரசாயன கழிவுகள் கங்கையில் கலக்கும் பிரச்சினை 1976-ல் இருந்து தொடர்கிறது. அதை நிரந்தரமாக தடுக்கும் தீர்வுதான் இதுவரை காணப்படவில்லை. குரோமியம் கலப்பதால் பொதுமக்கள் பல்வேறு நோய் களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, இந்த பிரச்சினையில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி ஆதர்ஷ் உத்தரவிட்டார்.
- பிடிஐ