Published : 27 Nov 2021 03:07 AM
Last Updated : 27 Nov 2021 03:07 AM

ரூ.75 லட்சம் வரதட்சணையில் விடுதி கட்டும் மணப்பெண்

ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் நகரை சேர்ந்த கிஷோர் சிங் கனாட் என்பவரின் மகள் அஞ்சலி கன்வார். இவர் பர்வீன் சிங் என்பவரை கடந்த 21-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு முன்பு அஞ்சலி தனது தந்தையை அணுகி, தனது வரதட்சணைக்காக ஒதுக்கிய ரூ.75 லட்சத்தை மாணவிகள் விடுதி கட்ட பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதனை கிஷோர் சிங் ஏற்றுக்கொண்டார்.

திருமண சடங்குகள் முடிந்த பிறகு தாராதாரா மடத்தின் தலைவர் மகந்த் பிரதாப் புரியை அஞ்சலி அணுகி தனது விருப்பதை கடிதம் மூலம் தெரிவித்தார். இதையடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் மத்தி யில் அந்தக் கடித்தை மகந்த் பிரதாப் சிங் வாசித்தார். இதற்கு அங்கிருந்த அனைவரும் பலத்த கைதட்டல் எழுப்பி வரவேற்பு தெரிவித்தனர்.

இதையடுத்து காசோலை ஒன்றை மகளுக்கு அளித்த கிஷோர் சிங், விரும்பிய பணத்தை நிரப்பிக் கொள்ளுமாறு கூறினார். தந்தை, மகளின் இந்த செயலை மகந்த் பிரதாப் புரி வெகுவாக பாராட்டினார்.

அவர் மேலும் கூறும்போது, “தேசிய நெடுஞ்சாலை 68-ல்கட்டப்படும் விடுதிக்கு ஏற்கெனவே கிஷோர் ரூ.1 கோடி கொடுத்துள்ளார். பணிகளை முடிக்க இன்னும் 75 லட்சம் வரை தேவைப்படுகிறது. இந்தப் பணம் மூலம் அங்கு விரைவில் விடுதி கட்டி முடிக்கப்படும்” என்றார். அஞ்சலிக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x