

தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. மத்திய சுற்றுலா வளர்ச்சித் துறை புள்ளிவிவரப்படி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் 2014-ல் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இதற்கு நம் நாட்டின் கடற்கரைகள், கோயில்கள், வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் கலாச்சாரம் முக்கிய காரணமாக உள்ளது. இந்தியாவில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றன. இதையொட்டி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை மத்திய சுற்றுலாத் துறை பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் 3 ஆண்டு புள்ளிவிவர அறிக்கை நாடாளுமன்ற மக்களவையில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் 2014-ல் சுமார் 46.57 லட்சம் சுற்றுலாப் பயணிகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 43.89 லட்சம் பயணிகளுடன் மகாராஷ்டிரம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
தமிழகத்தில் 2012-ல் 35.61 லட்சம், 2013-ல் 39.90 லட்சம், 2014-ல் 46.57 லட்சம் என சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் வெளிநாட்டினரின் மனம் கவர்ந்த இடங்களாக தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், மகாபலிபுரம் கடற்கரை கோயில் மற்றும் சிற்பங்கள், ராமேஸ்வரம் கோயில், கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை, மருதமலை கோயில், ரங்கம் ரங்கநாத பெருமாள் கோயில், நீலகிரி மலை, கொடைக்கானல் ஏரி, சென்னையில் கபாலீஸ்வரர் கோயில், பார்த்தசாரதி கோயில், சாந்தோம், புனித தோமையர் தேவாலயங்கள் ஆகியவை உள்ளன.
நாட்டின் தலைநகரான டெல்லிக்கு 2012-ல் 23.45 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இது 2013-ல் 23.01 லட்சம், 2014-ல் 23.19 லட்சம் ஆக உள்ளது. டெல்லியில் 2012-ஐ விட அடுத்த 2 ஆண்டுகளில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்கு டெல்லியில் வெளிநாட்டு பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு ஆளானதே காரணமாகக் கருதப்படுகிறது.
வெளிநாட்டவரை அதிகம் கவர்ந்த இடமாகக் கருதப்படும் கோவா, முதல் 10 மாநிலங்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. என்றாலும் 2012-ல் 4.50 லட்சம், 2013-ல் 4.92 லட்சம், 2014-ல் 5.13 லட்சம் என இங்கு வெளிநாட்டவர் வருகை அதிகரித்துள்ளது.
மிசோராம் மாநிலத்துக்கு வெளிநாட்டினர் வருகை 2012-ல் 744, 2013-ல் 800, 2014-ல் 836 என குறைந்த எண்ணிக்கையில் உள்ளது. இதைவிடக் குறைவாக லட்சத்தீவுக்கு 2012-ல் 580, 2013-ல் 371, 2014-ல் 514 பேர் வருகை புரிந்துள்ளனர்.
2014-ல் முந்தைய ஆண்டைக் காட்டிலும் வருகை குறைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களாக ஆந்திரா, டையூ-டாமன், இமாச்சலப் பிரதேசம், சண்டீகர், கர்நாடகா ஆகியவை உள்ளன.
தேசிய அளவிலான புள்ளிவிவரப்படி, 2012-ல் நம் நாட்டுக்கு 1.82 கோடி பேர் சுற்றுலா வந்துள்ளனர். இது 2013-ல் 1.19 கோடியாக குறைந்துள்ளது. ஆனால் 2014-ல் 2.25 கோடியாக உயர்ந்துள்ளது.
வெளிநாட்டு பயணிகளால் இந்தியாவுக்கு கிடைத்த வெளிநாட்டு பணம் 2012, 2013 மற்றும் 2014-ல் முறையே ரூ. 94,487 கோடி, ரூ.1,07,671 கோடி, ரூ. 1,23,320 கோடி ஆக உள்ளது.