Published : 26 Nov 2021 03:06 AM
Last Updated : 26 Nov 2021 03:06 AM

வங்கிக் கணக்கு வைத்திருக்கும் மகளிர் விகிதம் 78% ஆக அதிகரிப்பு; இந்தியாவில் 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்கள்: தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தகவல்

புதுடெல்லி

இந்தியாவில் 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் இருப்பதாக தேசிய குடும்பசுகாதார ஆய்வில் தெரியவந்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை சார்பில் கடந்த 1992-ம் ஆண்டு முதல் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, 2019-2021-ம் ஆண்டுக்கான ஆய்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. அதன் விவரம் வருமாறு:

இந்தியாவில் கடந்த 2015-16-ம் ஆண்டில் 1,000 ஆண்களுக்கு 991 பெண்கள் இருந்தனர். தற்போது 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் உள்ளனர். பெரும்பாலான மாநிலங்களில் ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனினும் குஜராத், மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், ஹரியாணா, மத்திய பிரதேசம், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், டெல்லி, சண்டிகர், அந்தமான் நிகோபர் தீவுகள்,தாத்ரா-நாகர் ஹவேலி, லடாக் உள்ளிட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. வரும் 2031-க்குள்சீனாவை பின்னுக்கு தள்ளி உலகில்அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும்.

இதுபோல 2015-16-ம் ஆண்டில் கணக்கெடுப்பு நடத்தியபோது வங்கிக் கணக்கு வைத்திருந்த பெண்களின் எண்ணிக்கை 53% ஆக இருந்தது. இது 2019-21 காலகட்டத்தில் 78 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதில் நகரங்களில் வசிக்கும் பெண்களில் 81% பேருக்கும், கிராமங்களில் 77.4% பேருக்கும் வங்கிக் கணக்கு உள்ளது. நகரங்களில் 38.3% பெண்கள், கிராமங்களில் 45.7% பெண்களின் பெயர்களின் சொத்துகள் உள்ளன. நகரங்களில் 69.4% பெண்களும், கிராமங்களில் 46.6% பெண்களும் செல்போன்களை பயன்படுத்துகின்றனர்.

அகில இந்திய அளவில் மருத்துவமனையில் மகப்பேறு நடைபெறுவது 79% லிருந்து 89% ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் இது 100% ஆக உள்ளது. கடந்த 2015-16-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது 55 சதவீதமாக இருந்தது. தற்போது இது 64% ஆக உயர்ந்துள்ளது.

பெரும்பாலான பெண்கள் தங்களது உடல்நலம், வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் தன்னிச்சை யாக முடிவு செய்கின்றனர். இதில் நகர்ப்புற பெண்களின் சதவீதம் 91 ஆகவும், கிராமங்களில் 87% ஆகவும் உள்ளது. இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x