Published : 26 Nov 2021 03:06 AM
Last Updated : 26 Nov 2021 03:06 AM

கட்டாய தத்து கொடுப்பால் இனி எந்த தாயும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வேன்: சட்டப் போராட்டம் மூலம் குழந்தையை மீட்ட கேரள பெண் அனுபமா திட்டவட்டம்

அனுபமா

திருவனந்தபுரம்

“கட்டாய தத்து கொடுப்புக்கு இனி எந்தவொரு தாயும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வேன்” என்று பெரும் சட்ட போராட்டத்திற்கு பின் தனது குழந்தையை மீட்ட கேரளாவைச் சேர்ந்த பெண் அனுபமா தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் அனுபமா. இந்திய மாணவர் கூட்டமைப்பின் (எஸ்எஃப்ஐ) முன்னாள் நிர்வாகியானஇவர், அஜித் குமார் என்பவரை காதலித்துதிருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்ஆண் குழந்தை பிறந்தது. இவர்களின் திருமணத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த அனுபமாவின் பெற்றோர், அந்தக் குழந்தையை வலுக்கட்டாயமாக கொண்டு சென்று தத்துக் கொடுப்பதற்காக மாநில குழந்தைகள் நல கவுன்சிலிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதையடுத்து, தனது குழந்தையை பறித்து சென்றுவிட்டதாக பெற்றோர் மீது காவல் நிலையத்தில் அனுபமா புகார் அளித்தார். இதற்கிடையே, ஆந்திராவைச் சேர்ந்த ஒரு தம்பதியிடம் அனுபமாவின் குழந்தையை மாநில குழந்தைகள் நல கவுன்சில் சட்டப்பூர்வமாக ஒப்படைத்து விட்டது.

இதன் தொடர்ச்சியாக, தனது குழந்தையை தன்னிடம் ஒப்படைக்கக் கோரிகேரள குழந்தைகள் நல கவுன்சில் முன்பு அனுபமா தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இதுகுறித்த செய்தி, ஊடகங்களில் வெளியாகவே, திருவனந்தபுரம் குடும்ப நில நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டது. மேலும், அனுபமாவின் குழந்தை தத்துக் கொடுக்கப்பட்டதை நிறுத்தி வைக்கு மாறும், இதுதொடர்பாக காவல் துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டது.

அதன்படி, ஆந்திர தம்பதிகளிடம் இருந்த குழந்தையை மாநில குழந்தைகள் நல கவுன்சில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கேரளாவுக்கு கொண்டு வந்தது. பின்னர், குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டு, அனுபமா – அஜித்குமார் தான் பெற்றோர் என உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் குழந்தை நேற்று முன்தினம் ஒப்படைக்கப்பட்டது.

நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின்னர் தனது குழந்தையை பெற்றுக் கொண்ட அனுபமா, அங்கிருந்த செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எனது மகன் இவ்வளவு சீக்கிரம் எனக்கு கிடைப்பான் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஏனெனில், சட்டப்பூர்வமாக தத்து கொடுத்த பிறகு அந்தக்குழந்தையை மீண்டும் பெற முடியாது என பலரும் கூறினர். சமீபத்தில் கேரள குழந்தைகள் நல கவுன்சிலுக்கு நான் சென்றபோதும், அதைத் தான் அவர்களும் கூறினர்.

எனது குழந்தையை நான் தேடிக் கொண்டிருப்பது தெரிந்தும், அவனை வேறு தம்பதிக்கு மாநில குழந்தைகள் நல கவுன்சில் தத்து கொடுத்தது. அந்த கவுன்சிலில் உள்ள தவறான அதிகாரிகளை எதிர்த்து நான் தொடர்ந்து போராடுவேன். இனி இதுபோன்ற கட்டாய தத்து கொடுப்புக்கு வேறு ஒரு தாய் ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வேன். இவ்வாறு அனுபமா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x