

தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட ஜே.என்.யூ. பல்கலைக் கழக மாணவர் தலைவர் கண்ணய்யா குமாருக்கு 6 மாத கால இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், அவர் இது தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், விசாரணையாளர்கள் எப்போது அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.
நீதிபதி பிரதிபா ராணி தலைமை அமர்வு கண்ணய்யா குமாருக்கு ரூ.10,000 என்ற அவரது சொந்தப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது.
மேலும் ஜே.என்.யூ. துறை சார்ந்த ஒருவர் கண்ணய்யா குமாருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது உயர் நீதிமன்ற அமர்வு.
ஜாமீன் உத்தரவில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீற மாட்டேன் என்று கண்ணய்யா குமார் உறுதி அளிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.
பிப்ரவரி 9-ம் தேதி ஜே.என்.யூ.வில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அப்சல் குருவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாக பிப்ரவரி 12-ம் தேதி கண்ணய்யா குமார் கைது செய்யப்பட்டார். இவரைத் தவிர உமர் காலித், அனிர்பான் பட்டாச்சாரியா ஆகிய 2 மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 2 மாணவர்கள் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் உள்ளனர்.