

கர்நாடகாவின் தார்வாட்டில் உள்ள எஸ்டிஎம் மருத்துவ அறிவியல் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் படிக்கும் குறைந்தது 66 மாணவர்கள் கரோனா வைரஸ் (கோவிட் -19) தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கல்லூரியின் இரண்டு விடுதிகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தார்வாட் துணை ஆணையர் நித்தேஷ் பாட்டீல் கூறியுள்ளதாவது:
கடந்த வாரம் கல்லூரியில் மாணவர்களை ஒருங்கிணைத்து நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில் சிலருக்கு கரோனா உள்ளது தெரியவந்த நிலையில் கல்லூரியில் படிக்கும் மொத்தம் 400 மாணவர்களுக்ளில் சுமார் 300 பேர் இதுவரை கோவிட்-19 சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரை பரிசோதனைசெய்யப்பட்ட 300 மாணவர்களில் இதுவரை 66 மாணவர்களுக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மீதமுள்ள 100 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாலைக்குள் அவர்களின் முடிவுகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், வளாகத்தில் நிறைய ஊழியர்கள் உள்ளனர், அவர்கள் பரிசோதிக்கப்படுவார்கள். நேர்மறை சோதனை செய்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவார்கள்.
திருமணங்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் போன்ற நிகழ்வுகளைத் தவிர்க்கவும், அல்லது இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்வது தவிர்க்க முடியாதது என்றால், முகக்கவசம், சானிடைசர்களைப் பயன்படுத்துதல் மற்றும் மற்றவர்களிடையே இடைவெளியைப் பேணுதல் போன்ற முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுமாறு நாங்கள் மக்களுக்கு அறிவுறுத்துகிறோம்.
மேலும், இங்குள்ள இரண்டு மாணவர்களின் தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தேவையான உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
நேர்மறை சோதனை செய்தவர்கள் வெளியே வர அனுமதிக்கப்பட மாட்டார்கள், மேலும் சோதனை முடிவுகளுக்காகக் காத்திருப்பவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், எனவே மேலும் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வளாகத்தில் உள்ள அனைவருக்கும் சோதனை செய்யப்படும்.
இவ்வாறு தார்வாட் துணை ஆணையர் தெரிவித்தார்.
இதற்கிடையில், அனைத்து மாணவர்களும் ஊழியர்களும் கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு டோஸ் மூலம் தடுப்பூசி போடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர், ஆனால் பதிவுகளை சரிபார்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.