வேளாண்மை, உணவுமுறையில் ஏற்படும் எதிர்கால அதிர்ச்சிகளை எதிர்கொள்ள நாடுகள் தயாராகுங்கள்: ஐ.நா. எச்சரிக்கை

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

கரோனா வைரஸ் போன்ற நோய்கள், வறட்சி, வெள்ளம் ஆகியவை மூலம் வேளாண்மை மற்றும் உணவு முறையில் ஏற்படும் எதிர்கால அதிர்ச்சிகளை எதிர்கொள்ள நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.

ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ஆண்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா பெருந்தொற்று நோய், தேசிய உணவு- வேளாண் முறையில் உள்ள பலவீனங்களை பரவலாக வெளிப்படுத்திவிட்டது. இந்தக் குறைபாடுகளை சரிசெய்ய உணவுப்பாதுகாப்பின்மை, ஊட்டச்சத்துக் குறைபாட்டை சரிசெய்ய வேண்டும்.

வேளாண்- உணவு முறை என்பது வேளாண் பொருட்கள் உற்பத்தி, உணவு அளிப்புச் சங்கிலி முறை, போக்குவரத்து மற்றும் நுகர்வு ஆகியவற்றைக் குறிக்கும்.

தற்போதுள்ள நிலையில் உலகளவில் 300 கோடி மக்கள் ஊட்டச்சத்துக் குறைபாடுக்கு எதிராக சத்தான உணவு இல்லாமல், சரிவிகித உணவு இல்லாமல் சிரமப்படுகிறார்கள். இதேநிலை நீடித்தால் அவர்களின் வருமானம் மூன்றில் ஒருபகுதியாகக் குறைந்தால், மேலும் 100 கோடி மக்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டில் சிக்குவார்கள்.

கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில், 2020ம் ஆண்டில் உலகளவில் 7.20 கோடி முதல் 8.11 கோடி வரையிலான மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை 2019-ம் ஆண்டில் 1.61 கோடியாகத்தான் இருந்தது. ஆனால், கரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் வறுமையிலும், பட்டினியிலும் வாடுவது அதிகரித்துள்ளது.

வறட்சி, வெள்ளம், பூச்சிகளால் ஏற்படும் பாதிப்பு ஆகிய அதிர்ச்சிகளில் இருந்து காக்கும் மேலாண்மைகளான காலநிலையை சரியாகக் கணித்தல், முன்கூட்டியே எச்சரித்தல், முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகள், திட்டமிடல் போன்றவை வேளாண் உணவு முறையையை பாதுகாக்கும்வழிகளாகும்.

உணவு முறைகளில் உள்ள பாதிப்புகளைக் கண்டறிய உதவுவதற்கு சில நெகிழ்வுதன்மை குறியீடுகளை உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு நிறுவியுள்ளது. இந்த குறியீடுகள் ஒரு நாட்டின் முதன்மை உற்பத்தி திறன், உணவு கிடைக்கும் அளவு மற்றும் மக்களுக்கு போதுமான உணவு கிடைப்பது ஆகியவற்றை அளவிடுகின்றன. ஒவ்வொரு நாடும் தங்களுடைய பலவீனங்களை அடையாளம் கண்டு இந்தக் கருவிகள் மூலம் அவற்றைச் சரிசெய்துகொள்ளலாம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in