

பிரதமர் மோடி மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றதன் மூலம் அவரின் ஆணவம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் 25-வது ஆண்டு விழா நேற்று பாட்னாவில் நடந்தது. இதில் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பங்கேற்றுப் பேசியதாவது:
''வேளாண் சட்டங்களைப் பிரதமர் மோடி திரும்பப் பெறுவதாக அறிவித்தது என்பது, விவசாயிகளின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி. நரேந்திர மோடியின் ஆணவம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்ட அங்கீகாரம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்.
மாநிலத்திலும், மத்தியிலும் என்டிஏ கூட்டணி ஆட்சியில் இருந்தாலும், விவசாயிகள் தரப்பில் ஆர்ஜேடி கட்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. விவசாயிகள், ஏழை மக்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது. அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் ஆட்சி அமைப்போம். பெண்களுக்கு அதிக அளவில் இடங்கள் ஒதுக்கப்படும்.
பிஹார் மக்களைப் பிரிந்து நீண்ட நாட்களாக இருந்ததாக நான் நினைக்கவில்லை. எப்போதும் மக்களுடன் இணைந்தே இருக்கிறேன். அதனால்தான் நானே இன்று ஜீப் ஓட்ட முடிவு செய்தேன்”.
இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரும், லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் பேசுகையில், “நிதிஷ் குமார் ஆட்சியில் மாநிலம் மிகவும் பின்தங்கிவிட்டது. வேலையின்மை, குற்றவீதம் அதிகரித்துள்ளது. கல்விநிலை சரிந்துவிட்டது, கடந்த 15 ஆண்டுகளாகப் பெரிய தொழிற்சாலை ஏதும் திறக்கப்படவில்லை. மழையால் வெள்ளம், மழையில்லாமல் வறட்சி இவை இரண்டும்தான் இருக்கிறது.
நிதி ஆயோக் பட்டியலில் பிஹார் எந்த இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் இருந்து தற்போது கடைசி இடத்துக்குச் சரிந்துவிட்டது. மக்களின் அடிப்படை வசதிகளைப் பற்றி மாநில அரசு பெரிதாக கவனம் செலுத்தாமல் இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் வெளியான நிதி ஆயோக் மேம்பாட்டு இலக்குப் பட்டியலில் பிஹார் மோசமான இடத்தில் இருக்கிறது’’ எனத் தெரிவித்தார்.