Published : 25 Nov 2021 10:11 AM
Last Updated : 25 Nov 2021 10:11 AM

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் மனைவி பிரனீத் கவுருக்கு காங்கிரஸ் கட்சி நோட்டீஸ்

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்குடன் அவரின் மனைவி பிரனீத் கவுர் | கோப்புப்படம்

சண்டிகர் 


பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்கின் மனைவியும் பாட்டியாலா தொகுதி காங்கிரஸ் எம்.பி. பிரனீத் கவுர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரையடுத்து, அவருக்கு நோட்டீஸ் அனுப்பி காங்கிரஸ் கட்சி விளக்கம் கேட்டுள்ளது.

பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தவர் அமரீந்தர் சிங். மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், அமரிந்தர் சிங்கிற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அமரிந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் சரண்ஜித் சன்னி முதல்வராக நியமிக்கப்பட்டார்.

காங்கிரஸ் தலைமையுடன் அதிருப்தியுடன் இருந்த அமரிந்தர் சிங், கட்சியில் இணைந்து செயல்பாடாமல் ஒதுங்கி இருந்தார். இருமுறை பாஜக மூத்த தலைவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து அமரிந்தர் சிங் திரும்பியதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அமரிந்தர் சிங் பஞ்சாப் மக்கள் காங்கிஸ் கட்சியை தொடங்கினார். அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கவும் அமரிந்தர் சிங் முயன்று வருகிறார்.

இந்நிலையில் அமரிந்தர் சிங் மனைவி பிரனீத் கவுர் பாட்டியாலா தொகுதி எம்.பி.யாக இருக்கிறார். கணவர் அமரிந்தர் சிங் காங்கிரஸில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கியபின் அவருடனே அனைத்து இடங்களுக்கும் பிரனீத் கவுர் சென்றுவருவது காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுதொடர்பாக பிரனீத் கவுருக்கு எதிராக காங்கிரஸ் தலைமைக்கு புகார்கள் சென்றன. இதைத்தொடர்ந்து அவரின் கட்சி விரோத நடவடிக்கை குறித்து காங்கிரஸ் தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரனீத் கவுருக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ஹரிஸ் சவுத்ரி அனுப்பிய நோட்டீஸ் கூறப்பட்டுள்ளதாவது “ கடந்த பல நாட்களாக பாட்டியாலாவைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள், நிர்வாகிகள் தொடர்ந்து உங்களின் கட்சிவிரோத நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவித்து வருகிறார்கள்.

உங்கள் கணவர் அமரிந்தர் சிங் காங்கிஸ் கட்சியிலிருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கியபின் இந்தப் புகார்கள் கூடுதலாக வருகின்றன. உங்கள் கணவர் கட்சியுடன் நீங்கள் நெருக்கமாக இருப்பதும், பேசுவதும் ஊடகங்களி்ல் காண முடிகிறது. ஆதலால், அடுத்த 7 நாட்களுக்குள் உங்கள் நிலைப்பாடு குறித்து கட்சிக்கு விளக்க வேண்டும். இல்லாவிட்டால் கட்சி சார்பில் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x