

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியே புகுந்து தாக்குதல்கள் நடத்தியதில் 166 பேர் இறந்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி எழுதியுள்ள இந்தியாவின் பாதுகாப்பு நிலைமை குறித்த புத்தகம் டிசம்பர் 2-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்து மணீஷ் திவாரி ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
கடந்த 20 ஆண்டுகளாக தேசிய பாதுகாப்பு சவால்களை நாடு எதிர்கொண்டதை எனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேன். மும்பை தீவிரவாத தாக்குதல் நடந்து 13 ஆண்டுகள் முடிந்துள்ளது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அரசுக்கு கட்டுப்பாடு என்பது வலிமையின் அடையாளம் அல்ல; அது பலவீனத்தின் அடையாளம்.
சரியான நேரம் வரும்போது, வெறும் பேச்சுக்களை விட செயல்கள்தான் வலிமையாக இருக்க வேண்டும். மும்பையில் தீவிரவாததாக்குதல் நடந்தபோது அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செயல்களும் வலிமையாக இருந்திருக்க வேண்டும். அதற்கு அப்போதைய பிரதமர் மன்மோகன் தலைமையிலான அரசு ராணுவ ரீதியில் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்திருக்க வேண்டும். இவ்வாறு மணீஷ் திவாரி கூறியுள்ளார்.
இந்தக் கருத்து காங்கிரஸில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு எதிராக கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.