தீவிரவாதிகளுடனான சண்டையின்போது பொதுமக்களைக் காப்பாற்றி வீரமரணமடைந்த போலீஸ் அதிகாரிக்கு சவுர்ய சக்ரா விருது

காஷ்மீர் எஸ்பிஓ பிலால் அகமது சார்பில் சவுர்ய சக்ரா விருதை அவரது தாய் சாரா பேகம் குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
காஷ்மீர் எஸ்பிஓ பிலால் அகமது சார்பில் சவுர்ய சக்ரா விருதை அவரது தாய் சாரா பேகம் குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
Updated on
1 min read

தீவிரவாதிகளுடனான சண்டையின்போது பொதுமக்களைக் காப்பாற்றி வீர மரணமடைந்த காஷ்மீரைச் சேர்ந்த சிறப்பு போலீஸ் அதிகாரி (எஸ்பிஓ) பிலால் அகமது மக்ரேவுக்கு சவுர்ய சக்ரா விருது வழங்கப்பட்டது. மக்ரேவின் சார்பாக அவரது தாயார் விருதைப் பெற்றுக்கொண்டார்.

முப்படைகளில் வீரதீரச் செயல் புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் வீர மரணமடைந்த சிறப்பு போலீஸ் அதிகாரி பிலால் அகமது மக்ரே சார்பில் அவரது தாயார் சாரா பேகம் விருதைப் பெற்றுக்கொண்டார். முன்னதாக விருது பெற செல்லும்போது தன் மகனை நினைத்துக் கொண்ட சாரா பேகம், ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டார். இதைப் பார்த்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த ஒரு சில அடிகள் முன்னே சென்று சாரா பேகத்திடம் விருதை வழங்கினார். மேலும் சாரா பேகத்துக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி தேற்றினார்.

வீரதீரச் செயல்கள் புரியும் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் 3-வது உயரிய விருது சவுர்ய சக்ரா விருது என்பது குறிப்பிடத்தக்கது.

2019-ம் ஆண்டில் காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் தீவிரவாதிகளுடனான சண்டையின்போது, பிலால் அகமது மக்ரே பணியில் இருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்த பொதுமக்களை பிலால் அகமது சாதுர்யமாக செயல்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தினார். பின்னர் தீவிரவாதிகளுடனான சண்டையின்போது குண்டடிபட்டு அவர் வீர மரணமடைந்தார். ஆனால், அவரது உயிர் உடலில் இருந்து பிரியும் வரையில் அவர் தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே இருந்தார். விருதுடன் வழங்கப்பட்ட பாராட்டுப் பத்திரத்தில் வீரதீரச் செயல் புரிந்த பிலாலின் சாகசச் செயல் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

விருதைப் பெற்றுக் கொண்ட பின்னர் இருக்கைக்குத் திரும்பிய சாரா பேகத்துக்கு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆறுதல் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in