

விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 48 மணி நேரத்துக்கு அனைத்து மருத்துவமனைகளும் இலவசமாக சிகிச்சை அளிக்கும் திட்டத்தை கர்நாடக அரசு நேற்று அறிமுகம் செய்தது.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கெரேகவுடனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ் நஞ்சப்பா (26) கடந்த மாதம் 16-ம் தேதி விபத்தில் சிக்கினார். இதில் அவரது உடல் இரு துண்டுகளாகி உயிருக்கு போராடும் நிலையில், “நான் பிழைப்பது மிகவும் கடினம். எனது உடல் உறுப்புகளை எடுத்து தேவையானவர்களுக்கு தானம் செய்யுங்கள்” என காப்பாற்ற வந்த வர்களிடம் கெஞ்சினார். இதனால் உடல் உறுப்பு தானம், கண் தானம் குறித்து கர்நாடகாவில் அதிக விழிப் புணர்வு ஏற்பட்டது. இதையடுத்து, மாநில சுகாதாரத் துறை சார்பில் ஹரீஷ் பெயரில் புதிய திட்டம் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, ஹரீஷ் பெயரில் விபத்து காப்பீட்டு திட்டத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஹரீஷின் தாயார் கீதம்மா, சுகா தாரத் துறை அமைச்சர் யு.டி. காதர், உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
சமீபத்தில் ஹரீஷின் மரணம் என்னை மிகவும் பாதித்தது. விபத் தில் உடல் இரு துண்டுகளாகி உயிருக்கு போராடும் நிலையில், தனது உயிரையும் பொருட்படுத்தா மல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி னார். தனது வலியை பொருட்படுத் தாமல், அடுத்தவரின் வலியை நினைத்திருக்கிறார். எனவே விபத்தில் சிக்கியவர்களின் உயிரை காக்கும் இந்த திட்டத்துக்கு ஹரீஷின் பெயரை சூட்டியுள்ளோம்.
ஆசியாவிலே முதல் முறையாக விபத்தில் சிக்கியவரின் உயிரை காக்கும் திட்டத்தை கர்நாடக அரசு தான் அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் விபத்தில் சிக்கி, காயமடைந்தோருக்கு முதல் 48 மணி நேரம் வரை இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். இந்த திட்டம் சாலை விபத்தில் சிக்கியோருக்கு மட்டு மில்லாமல், கட்டிடத்தில் இருந்து விழுந்து காயம் அடைந்தோருக்கும் பயனுள்ளதாக அமையும்.
முதல் கட்டமாக இந்த திட்டத்தில் மாநிலத்தில் உள்ள 280 தனியார் மருத்துவமனைகள் இணைக்கப் பட்டுள்ளன. கூடிய விரைவில் அனைத்து மருத்துவமனைகளும் இந்த திட்டத்தில் இணைக்கப்படும். இலவசமாக சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனையின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக முதல் கட்டமாக ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அடுத்த 6 மாதங்களில் ரூ.75 கோடி ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.