

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) வெடிமருந்து குடோனில் திருட்டு சம்பவம் நடந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லூர் மாவட்டத்தில் உள்ள இஸ்ரோ மையத்தில் மத்திய பாதுகாப்பு படையினர், ஆயுதப் படை போலீஸார் மற்றும் மாநில போலீஸார் என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிக்கப் படுவதால் அனுமதியின்றி இஸ்ரோ வளாகத்துக்குள் யாராலும் நுழைய முடியாது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு மர்ம கும்பல் ஒன்று பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்களுடன் இஸ்ரோ வளாகத்துக்குள் நுழைந்துள்ளது. அங்குள்ள ‘மேகஜின் பவன்’ என்றழைக்கப்படும் வெடி மருந்து பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் குடோன் பூட்டை உடைத்து செம்பு, இரும்பு போன்ற பொருட்களை திருடிச் சென்றுள்ளது.
பலத்த பாதுகாப்பு கெடுபிடிகள் நிறைந்த இந்த பகுதிக்குள் நடந்த இந்த திருட்டுச் சம்பவம் இஸ்ரோ அதிகாரிகளை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குடோனில் நுழைந்த அந்த மர்ம கும்பல் தவறுதலாக தீக் குச்சியை உரசியிருந்தால், தேக்கி வைக்கப்பட்டிருந்த வெடிப் பொருட்கள் அனைத்தும் வெடித்து சிதறி இருக்கும். மேலும் பல கி.மீ தொலைவுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இதனால் குடோன் உள்ள பகுதியில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, மத்திய அரசுக்கும் அறிக்கை அனுப்பப் பட்டிருப்பதாக கூறப்படுகிறது.